FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மும்பை போராட்டத்தில் போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் யார்?

மும்பை போராட்டத்தில் போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் பற்றி...

Updated On : 25 ஜூலை 2026, 12:52 pm IST
மும்பையில் போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய பெண் - X
பகிர்:

மும்பையில் மழையில் நனைந்தபடி காவல்துறை வாகனத்தை ஒற்றை ஆளாக ஓர் இளம்பெண் தடுத்தி நிறுத்திய விடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் கல்வித் துறை சீதிருத்தத்தை வலியுறுத்தியும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் இளைஞர்கள் தீவிர போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையின் தாதர் பகுதியில் ஜூலை 22 அன்று ஓர் இளம்பெண், போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, தன்னுடன் போராடிய சக நண்பர்களை காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றபோது, அந்த வாகனத்தை சற்றும் யோசிக்காமல் தடுத்து நிறுத்தினார்.

Advertisement

Advertisement

அவர் வாகனத்தை தடுத்து நிறுத்தியதால் அந்த வாகனம் கொஞ்சம்கூட நகர முடியாமல் போனது.

உடனே அந்த வாகனத்தின் பின் பகுதியில் உள்ள தாழ்ப்பாழை திறந்து கைதான தன் நண்பர்களை விடுவித்து மீண்டும் போராட்டத்தில் இறங்கினார் அந்த பெண்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரவலாக பாராட்டைப் பெற்று வருகிறது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக (முகமாக) அவர் மாறியுள்ளார்.

ரியா அஹிர்

அவரது பெயர் ரியா அஹிர். வயது 27. ரியா யாதவ் என்றும் அழைக்கப்படுகிறார். ராணுவப் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். ஓவியர், நடன ஆர்வலர், மாடல், தொழிலதிபர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர். தான் எழுதியுள்ள ஒரு திரைக்கதைக்கு காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் போராட்டத்தில் ரியா பங்கேற்பதற்கு அவரது தந்தை முழு ஆதரவு தெரிவித்ததாகவும் இளைஞர்களுக்கு தற்போது நடக்கும் அநீதியை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஜூலை 22 அன்று நடந்த சம்பவம் குறித்து கூறும் அவர், அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை, கண்ணைக்கூட மூடவில்லை என்றார்.

"கோஹினூர் ஸ்குயர் பகுதியில் இருந்து சிவாஜி பார்க் நோக்கி நான் சாதாரணமாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு போராடிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்வதற்கான முறையான ஆணை காவல்துறையினரிடம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு அந்த காவல்துறை வேனை தடுத்து நிறுத்த முயன்றேன். எனது உரிமைகள் என்ன? என்பது குறித்து நான் படித்திருந்தேன். வேனில் இருந்த இளைஞர்களைக் கைது செய்ய உங்களிடம் ஆணை உள்ளதா? என்று காவலரிடம் கேட்டபோது அவர் தயங்கினார். அப்போதுதான் நான் ஏதோ ஒன்று செய்ய வேண்டும் என்று தோன்றியது. வேனுக்கு அருகிலேயே நடந்து செல்வது ஆபத்தானது. எனவே, வேனின் முன்பாக சென்று தடுத்து நிறுத்தினேன்" என்று கூறுகிறார்.

மேலும் பேசுகையில், "போலீசுக்கு எதிராக நிற்கும்போது உள்ளுக்குள் சற்று அதிர்ச்சி அடைந்தேன். எனினும் 'நான் செய்வது சரிதான்' என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக நிற்க முடிவெடுத்தேன்.

போராடியவர்களை கைது செய்த காவல்துறை, சிறிது தூரம் சென்றபிறகு அவர்களை விடுவிப்பதாகக் கூறினார்கள். அவர்களது விளக்கத்தில் எனக்கு திருப்தியில்லை. எனவே, அவர்கள் வாகனத்தை விட்டு விலகக் கோரியும் நான் விலகவில்லை" என்றார்.

ரியா அஹிர்

அவர் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய சில நிமிடங்களிலேயே பல இளைஞர்கள் அவரைச் சுற்றித் திரண்டு, 'இன்குலாப் ஜிந்தாபாத்!' (புரட்சி ஓங்குக) போன்ற முழக்கங்களை எழுப்பியபடி அவருடன் இணைந்தனர்.

ரியா அஹிர் என்ற இளம்பெண், ஒற்றை கையால் மிகவும் கம்பீரமாக அந்த காவல்துறை வேனைத் தடுத்து நிறுத்திய அந்த நிகழ்வு நடந்து சில நாள்களாகியும், இதுதொடர்பான புகைப்படங்களும் விடியோக்களும் இணையத்தில் இன்றும் பகிரப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகின்றன.

இணையத்தில் தான் அதிகம் பேசப்படுவது குறித்து ரியா, "நான் எனது கருத்தைப் பதிவு செய்யவும், எனது உரிமையைப் பயன்படுத்தவும், நாடு முழுவதும் நடைபெறும் அந்தப் போராட்ட இயக்கத்துடன் ஒன்றிணைய மட்டுமே முயன்றேன்" என்று பணிவாகக் கூறும் அவர், இந்த அளவுக்கு அவரது செயல் வைரலாகும் என்று நினைக்கவில்லை என்று தெரிவிக்கிறார்.

பெண்கள் எவ்வளவு வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்கு ரியா அஹிர் ஓர் எடுத்துக்காட்டு என்று சமூக ஊடகங்களில் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

summary

Rhiya ahir is the woman who blocked the police vehicle during the Mumbai protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments