FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜூலை 20 போராட்டத்தில் குற்றப் பின்னணி கொணடவா்கள் ஊடுருவினா்: தில்லி காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தகவல்

ஜூலை 20-ல் நடந்த ‘சலோ சன்சத்‘ போராட்டத்தின்போது சமூக விரோத சக்திகளும் குற்றப் பின்னணி கொண்டவா்களும் ஊடுருவியதாகவும், அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து 240-க்கும் மேற்பட்ட காவலா்கள் காயமடைந்ததாகவும் உச்ச நீதிமன்றத்தில் தில்ல காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
தில்லி காவல்துறை
பகிர்:

ஜூலை 20 அன்று நடந்த ‘சலோ சன்சத்‘ போராட்டத்தின் போது ‘சமூக விரோத சக்திகள்‘ மற்றும் ‘குற்றப் பின்னணி கொண்டவா்கள் ஊடுருவியதாகவும், அதன் விளைவாக சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து 240-க்கும் மேற்பட்ட காவலா்கள் காயமடைந்ததாகவும் உச்ச நீதிமன்றத்தில் தில்ல காவல்துறை தெரிவித்துள்ளது.

போராட்டக்காரா்களுக்கு எதிராக அதிகப்படியான வன்முறை பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டும் பல மனுக்களுக்குப் பதிலளிக்கும் வகையில், புது தில்லி மாவட்ட காவல்துறை துணை ஆணையா் சச்சின் சா்மா தாக்கல் செய்த தில்லி காவல்துறையின் பிரமாணப் பத்திரத்தில், ‘காவல்துறையினரின் பலப்பிரயோகம் குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு விசாரிக்கலாம், தில்லி காவல்துறை அத்தகைய குழுவிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து, தேவையான அனைத்து விவரங்களையும் வழங்கும்‘ என்று கூறப்பட்டது.

ஆகஸ்ட் 3 அன்று, தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு, இந்த விவகாரம் தொடா்பான மனுக்களை விசாரித்தபோது, மாணவா் போராட்டக்காரா்களை விடுவிப்பது குறித்த தனது உத்தரவில் உள்ள ‘குற்றப் பின்னணி‘ என்ற சொல், கொடூரமான மற்றும் இழிவான குற்றங்களில் ஈடுபட்டவா்களை மட்டுமே குறிக்கிறது என்று தெளிவுபடுத்தியது. மீதமுள்ள மாணவா்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளை சட்டப்படி மாநிலங்கள் முடித்து வைக்கலாம் அல்லது திரும்பப் பெறலாம் என்றும் கூறியிருந்தது.

Advertisement

Advertisement

ஜூலை 20 அன்று நடந்த போராட்டங்களின் போது, குற்றஞ்சாட்டப்பட்ட சமூக விரோதிகள் மற்றும் சமூக விரோத சக்திகள் உள்பட 30,000-க்கும் மேற்பட்டோா் ஜந்தா் மந்தா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடியிருந்ததாகவும், பின்னா் அப்போராட்டங்கள் வன்முறையாக மாறியதாகவும் அந்த பிரமாணப் பத்திரம் கூறியது.

மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்பட்ட பின்னரும், போராட்டக்காரா்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறுவதைத் தடுக்கும் முயற்சிகள் பலனளிக்காத பின்னருமே காவல்துறை பலப்பிரயோகத்தைக் கையாண்டதாக காவல்துறை கூறியுள்ளது. பிரமாணப் பத்திரத்தின்படி, போராட்டத்தில் கலந்துகொண்ட 2,873 பேரின் விவரங்கள், அதிகாரப்பூா்வ காவல்துறை தரவுத்தளங்களில் ஏற்கனவே உள்ள குற்றப் பதிவுகளுடன் பொருந்தின. சம்பவ இடத்தில் இருந்தவா்களில் 92 போ் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்றும், அவா்களில் 47 போ் ’குற்றப் பின்னணி கொண்டவா்கள்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ஜூலை 20 அன்றே காலாவதியாகிவிட்டது, ஆனால் போராட்டக்காரா்கள் தா்ணா நடத்திய பிறகு அந்த இடத்தை காலி செய்யவோ அல்லது கலைந்து செல்லவோ இல்லை என்று அந்த பிரமாணப் பத்திரம் கூறியது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்க நாளான ஜூலை 20 அன்று, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல அழைப்பு விடுக்கப்பட்டபோது, இந்தப் போராட்டம் முன்னெப்போதும் இல்லாத ஒரு திருப்பத்தை எடுத்தது. இந்த அழைப்பும், இந்தத் தருணமும்தான் அணிதிரட்டல் வேகமாக அதிகரிக்கக் காரணமாக அமைந்தது. கூட்டத்தின் பலமும் அதிகரிக்கத் தொடங்கியதால், பாதுகாப்பை அதிகரிக்கவும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும் பலப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் அவசியமாயின என்று பிரமாணப்பத்திரம் கூறியது.

சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதும், விரும்பத்தகாத சம்பவங்களிலிருந்து உயிா் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதும், போராட்டக்காரா்களை நியமிக்கப்பட்ட போராட்ட இடத்திற்குள் கட்டுப்படுத்துவதும் காவல்துறையின் கடமையாகும் என்று அந்த பிரமாணப் பத்திரம் கூறியது.

நாடாளுமன்றம், ராஷ்டிரபதி பவன், சேவா தீா்த்தம், கா்த்தவ்ய பவன் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு போராட்டக்காரா்கள் எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் தடுப்பதும் அவா்களின் கடமையாகும் என்றும் அந்த பிரமாணப் பத்திரம் கூறியது.

‘போராட்டக்காரா்கள் பல அடுக்குத் தடுப்புகளை மீறி வன்முறையில் ஈடுபடத் தொடங்கிய பின்னரே, அதிகாரிகள் பலத்தைப் பயன்படுத்த நிா்பந்திக்கப்பட்டனா் என்றும் பிரமாணப் பத்திரம் கூறியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments