சிங்கப்பூர் முன்னாள் அதிபரின் சுயசரிதை தமிழில் வெளியீடு
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் சுயசரிதை நூல், தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் சுயசரிதை நூல், தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், அந்நாட்டு வெளியுறவு மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
"ஒரு எதிர்பாராத பயணம்: தலைமைப் பண்பைப் பெறுவதற்கான வழி' என்ற அந்த நூல், 678 பக்கங்களைக் கொண்டது.
அதில், நாதன் குழந்தைப் பருவத்தில் தாம் சந்தித்த துயரங்கள், இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம், சிங்கப்பூர் அரசியல் வாழ்க்கை ஆகியவை பற்றி விரிவாகக் கூறியுள்ளார்.
முதலில் ஆங்கில மொழியில் 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த நூலை, சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மொழியியல் துறையைச் சேர்ந்த நிபுணர் பழனியப்பன், சுமார் ஓராண்டு காலம் பாடுபட்டு தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் கே.சண்முகம் பேசுகையில், "திறமையும், பணிவும் நிறைந்த மாமனிதர் எஸ்.ஆர்.நாதன். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு அவர் வழிகாட்டியாக விளங்குகிறார்.
இந்த தமிழ் நூல், இந்திய சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பாக உள்ளது' என்றார்.
எஸ்.ஆர்.நாதன் (90), சிங்கப்பூரின் 6ஆவது அதிபராக, 1999ஆம் ஆண்டில் இருந்து 2011ஆண்டு வரை பதவி வகித்தார்.