உலகம்

ஸ்கார்லெட் வழக்கில் மீண்டும் விசாரணை: பிரதமருக்கு சிறுமியின் தாய் கடிதம்

DIN

பிரிட்டன் சிறுமி ஸ்கார்லெட் கீலிங், கோவா கடற்கரையில் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுமியின் தாயார் ஃபியோனா மேக்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தை, பனாஜியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

எனது மகள் ஸ்கார்லெட்டை போதை மருந்துக் கடத்தல் கும்பல் ஒன்று கொலை செய்ததாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர். அந்தக் கடத்தல் கும்பலுக்கு உள்ளூர் காவல் துறை மற்றும் அரசியல் தொடர்புகள் இருப்பதால் எனக்கு நீதி கிடைக்கவில்லை.

இப்போது வரை நீதித் துறையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய இருவரும் குற்றவாளிகள் இல்லை என்றால், எனது மகளைக் கொன்றவர்களை நான் அறிந்தாக வேண்டும்.

எனது மகளின் சாவுக்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, ஸ்கார்லெட் வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது அதற்கு இணையான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஃபியோனா மேக்வான் தரப்பு வழக்குரைஞர் விக்ரம் வர்மா கூறினார்.

கோவாவில் உள்ள புகழ்பெற்ற அஞ்சுனா கடற்கரையில் இருந்து கடந்த 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதியன்று ஸ்கார்லெட் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக முதலில் கோவா காவல் துறையும், பின்னர் சிபிஐயும் விசாரணை நடத்தின.

இந்நிலையில், சாம்சன் டி சௌசா, பிளாசிடோ கார்வால்கோ ஆகிய இருவரும் ஸ்கார்லெட்டுக்குப் போதை மருந்து அளித்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அங்கேயே விட்டுச் சென்றதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும், போதிய ஆதாரம் இல்லையென்று கூறி நீதிமன்றம் கடந்த வாரம் விடுவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT