உலகம்

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜெரி லூயிஸ் காலமானார்

DIN

பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ஜெரி லூயிஸ் (91) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
சிறு வயது முதலே மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து வந்த அவர், பின்னர் தொலைக்காட்சிகளில் நடத்திய நிகழ்ச்சிகள் மூலம் பெரும் புகழடைந்தார். அதன் பிறகு, நகைச்சுவை நடிகரும் பாடகருமான டீன் மார்ட்டினுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சிகள் மூலம் உலகப் புகழ் பெற்றனர். நகைச்சுவை இரட்டையர்களாக அறியப்பட்ட இவர்களை கார்ட்டூன் கதாபாத்திரங்களாக்கி டிசி காமிக்ஸ் நிறுவனம் 1952 முதல் 1957 வரை ஏராளமான படக்கதைப் புத்தகங்களை வெளியிட்டது.
இருவரும் தனித் தனியாக நடிக்க முடிவு செய்து பிரிந்த பிறகு திரைப்பட இயக்கத்திலும் ஈடுபட்ட ஜெரி லூயிஸ் பல நகைச்சுவைப் படங்களை எழுதி இயக்கினார்.
ஜெரி லூயிஸ் எழுதி இயக்கி 1963-ஆம் ஆண்டு வெளியான 'நட்டி புரொபசர்' உலகப் புகழ் பெற்றது. இந்தத் திரைப்படத்தை தழுவி உலகின் பல மொழிகளிலும் படங்கள் உருவாக்கப்பட்டன. 'நட்டி புரொபசர்' அமெரிக்காவின் 100 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய கலை ஆவணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல படங்களை அவர் எழுதி இயக்கினார். அவரது திரைப்பட இயக்க நுணுக்கங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றன. தனது இயக்குநர் அனுபவங்கள் குறித்து 'தி டோட்டல் பிலிம் மேக்கர்' என்ற புத்தகத்தை எழுதினார்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கலையுலக வாழ்க்கை கண்ட ஜெரி லூயிஸ், ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டி மருத்துவ உதவி உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி நன்கொடை திரட்டுவதில் மன்னர் என்று பெயரெடுத்தார்.
பின்னாளில் அவர் திரைப்படக் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஜார்ஜ் லூக்காஸ் இவருடைய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT