அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக தொழிலதிபர் ரெக்ஸ் டில்லர்ஸன் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு மிக நெருக்கமானவர் என்ற சர்ச்சைக்கிடையிலும் ரெக்ஸ் டில்லர்ஸன்க்கு முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபிலின் தலைமை செயலதிகாரியாகப் பொறுப்பு வகித்துள்ள ரெக்ஸ் டில்லர்ஸன், இதுவரை எந்த அரசுப் பதவியும் வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை அதிபர் டிரம்ப் வழங்குவது குறித்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில், ரெக்ஸ் டில்லர்ஸனின் நியமனத்துக்கு ஆதரவாக 56 எம்.பி.க்களும், எதிராக 43 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
இதையடுத்து, அதிபர் மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், வெளியுறவுத் துறை அமைச்சராக ரெக்ஸ் டில்லர்ஸன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:
கிழக்கு ஆசியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் வன்முறை தலைவிரித்து ஆடிவரும் நிலையில், அந்தப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
எனினும், சவாலைச் சமாளித்து அந்தப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவோம் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
குழப்பங்கள் நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில், வெளிவிவகாரங்களைக் கையாள முற்றிலும் புதிய, கலப்படமில்லாத சிந்தையைக் கொண்ட ஒருவர்தான் ஏற்றவர்.
ஒருவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவருக்கு முழு உரிமை உள்ளது என்ற ஆதிகால உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, அண்மைக் கால அரசியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவர்கள்தான் நமக்குத் தேவை.
அந்த வகையில், வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு ரெக்ஸ் டில்லர்ஸன் மிகவும் பொருத்தமானவர் என்றார் அவர்.
அமெரிக்காவின் எக்ஸான் மொபில் எண்ணெய் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக இருந்தபோது, ரஷியாவுடன் மிக நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டு அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ரோஸ்னெஃப்ட் எண்ணெய் நிறுவனத்துடன் பல கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை ரெக்ஸ் டில்லர்ஸன் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக, 2013-ஆம் ஆண்டுக்கான "ரஷியாவின் சிறந்த நண்பன்' விருது வழங்கி ரெக்ஸ் டில்லர்ஸன் கெளரவிக்கப்பட்டார்.
இதனால், ரஷியாவுக்கு எதிரான அவரது கண்ணோட்டம் குறித்து சர்ச்சை நிலவி வருகிறது.
ரெக்ஸ் டில்லர்ஸனின் நியமனத்துக்கு முன்னர் நடைபெற்ற எம்.பி.க்களின் நேர்காணலின்போது, ரஷியா குறித்த அவரது நிலைப்பாடு குறித்து எம்.பி.க்கள் வினா எழுப்பினர்.
அதற்கு ரெக்ஸ் அளித்த பதிலில், ராணுவ வலிமையைக் காட்டி உலக விவகாரங்களில் ரஷியா தலையிடுவது ஆபத்தானது என்று தெரிவித்தார்.
எனினும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை போர் குற்றவாளி என்று அறிவிக்கத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிற நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்படக்கூடிய உரசல்கள்தான் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸன் முன் உள்ள முதல் சவால் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.