இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுக மேம்பாடு, பயன்பாடு தொடர்பாக இலங்கை - சீனா இடையே 99 ஆண்டு காலத்துக்கான உடன்படிக்கை சனிக்கிழமை கையெழுத்தானது.
இது தொடர்பாக துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியது: இந்த ஒப்பந்தப்படி, துறைமுகத்தில் 70 சதவீதப் பங்கு சீன அரசுக்கு சொந்தமான வணிகத் துறைமுக நிறுவனத்துக்கு அளிக்கப்படும். குத்தகை அடிப்படையில் 99 ஆண்டு காலத்துக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும். துறைமுகத்தின் பயன்பாடு, மேம்பாட்டுக்கு சீனா 110 கோடி டாலர் (சுமார் ரூ. 7,150 கோடி) முதலீடு செய்யவுள்ளது.
வெளிநாட்டு கடற்படை எதுவும் இந்த துறைமுகத்தை தளமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் ஆட்சிக் காலத்தில் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் சர்வதேச தரத்தில் துறைமுகம் அமைக்க முடிவானது. சீன அரசு நிறுவனத்தின் உதவியுடன் முதல் கட்ட கட்டுமானம் 2008-ஆம் ஆண்டு தொடங்கி 2010-இல் நிறைவடைந்தது. இதன் மேம்பாட்டில் சீனா மிக மும்முரமாக ஆர்வம் காட்டி வந்தது. கப்பல்களிலிருந்து சரக்குகளை இறக்கி ஏற்றவும் கப்பல்களில் பழுது நீக்கவும் உதவும் மிதவைத் துறையை அமைக்க சீனா முன்வந்தது. ஆனால் சீனாவின் திட்டங்களுக்கு ராஜபட்ச ஒப்புதல் வழங்கவில்லை. மேலும், சீன கடற்படைக் கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்தும் என்ற அச்சம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, துறைமுகத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கையில் ஆட்சி மாறியதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புதிய உடன்படிக்கை ஏற்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.