உலகம்

கைலாச மானசரோவர் யாத்திரை பிரச்னை: தீர்வுகாண தொடங்கியது பேச்சுவார்த்தை

DIN

கைலாச மானசரோவர் புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுஹாங், திங்கள்கிழமை கூறுகையில், ""இந்திய யாத்ரீகர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்'' என்றார்.
எனினும், கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாகத்தான், இந்திய யாத்ரீகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்களா? என்று தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
சீனாவின் தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தில் உள்ள கைலாச மானசரோவருக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் புனித யாத்திரை செல்கின்றனர். இந்நிலையில் நிகழாண்டில் புனித யாத்திரை செல்வதற்காக, 350 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 47 பேர் கொண்ட முதல் குழுவினர் கடந்த வாரம் யாத்திரையைத் தொடங்கினர்.
அவர்கள், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய் வழியாகக் கடந்த 19-ஆம் தேதி செல்ல முயன்றனர். ஆனால், மோசமான வானிலை நிலவியதால் அவர்களால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை. அவர்கள் சிக்கிமில் உள்ள முகாமில் காத்திருந்தனர். பிறகு, அவர்கள் கடந்த 23-ஆம் தேதி பயணத்தைத் தொடர முயன்றபோது, சீன அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், யாத்திரையைத் தொடர முடியாமல், அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி விட்டனர்.
இதனிடையே, கனமழை காரணமாக சாலைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றைச் சீரமைக்கும் வரை யாத்ரீகள் பயணத்தைத் தொடர முடியாது என்று சீன அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து நாதுலா கணவாய் வழியாக கைலாச மானசரோவர் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், இந்திய யாத்ரீகர்களை சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணுசக்தி விநியோகக் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராகச் சேரும் முயற்சிக்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது, சீனா-பாகிஸ்தான் இடையே பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றால் இந்தியா-சீனா இடையிலான உறவில் இடையிலான உறவில் நெருடலான நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில், கைலாச மானசரோவர் யாத்திரையையும் சீன அரசு முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT