அமெரிக்காவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமூல் தாப்பரை நியமித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
தற்போது கென்டக்கி மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக அமூல் தாப்பர் (47) பொறுப்பு வகித்து வருகிறார். அவரை அந்தப் பதவியில் கடந்த 2007-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நியமித்தார். கென்டக்கி மாவட்ட நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் ஆசியர் என்ற பெருமைக்குரியவர் அவர். அதனைத் தொடர்ந்து தற்போது மாகாண மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, அவர் சட்டக் கல்வி பயின்ற பிறகு ஒஹையோ மாவட்ட நீதிபதியின் சட்ட உதவியாளராக இருந்தார். பின்னர், ஒஹையோ மாகாணத்தில் மத்திய அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார். அதையடுத்து, கென்டக்கி மாகாண அரசு வழக்குரைஞராக 2006-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டு கென்டக்கி மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அரசு வழக்கறிஞராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றிய காலத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சட்டத் துறையில் பகுதி நேரப் பேராசிரியாகப் பணியாற்றினார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் 6-ஆவது சர்க்கிட் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். கென்டக்கி, டென்னெஸி, ஒஹையோ, மிச்சிகன் ஆகிய மாகாணங்களுக்கான மேல்முறையீட்டு நீதிமன்றமாக அந்த நீதிமன்றம் செயல்படுகிறது.
கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தின் இடையே, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் காலியாக இருந்த இடத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் பட்டியலை டிரம்ப் வெளியிட்டார். அதில் அமூல் தாப்பர் பெயர் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.