முகப்பு
உலகம்

நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது மேலும் ஒரு வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
வருமானத்தை மீறி சொத்து குவித்த வழக்கில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இது அவருக்கு எதிரான மூன்றாவது வழக்காகும்.
நவாஸ் ஷெரீஃபுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஊழல் புகார்களை விசாரித்த அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அவரைத் தகுதி நீக்கம் செய்தது. மேலும் அந்தப் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி வழக்கு தாக்கல் செய்ய கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. 
இந்த நிலையில், அவர் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. லண்டனில் குடும்பத்தினர் பெயரில் குடியிருப்புகள் வாங்கியது, வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட மகன்களின் நிறுவனத்தால் பலனடைந்தது, வருமானத்தை மீறி சொத்து குவித்தது ஆகியவை தொடர்பான மூன்று வழக்குகளிலும் தற்போது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை தொடங்கியபோது, நவாஸ் ஷெரீஃப் சார்பில் அவரது வழக்குரைஞர் ஸஃபீர் கான் ஆஜரானார். நவாஸ் ஷெரீஃப் தற்போது லண்டனில் உள்ளதால் அவர் நாடு திரும்பும்வரை குற்றச்சாட்டுப் பதிவு நடவடிக்கையை ஒத்தி வைக்கும்படி கோரினார். நவாஸ் வழக்குரைஞரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி முகமது பஷீர் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.
லண்டன் குடியிருப்பு, மகன்களின் நிறுவனத்தில் பணியாற்றியது தொடர்பான இரு வழக்குகளில் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு நடவடிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.
இந்த மூன்று வழக்குகளுமே சொத்து குவிப்பு தொடர்புடையவை என்பதால், அவற்றை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான தீர்ப்பு வரும்வரை ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்ற விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.
லண்டன் குடியிருப்பு தொடர்பான வழக்கில் அவரது மகள் மரியம், மருமகன் முகமது சஃப்த் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் நவாஸின் மகன்கள் ஹுசேன், ஹசன் ஆகியோர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் தற்போது லண்டனில் உள்ளனர். அவர்கள் இருவரும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஹுசேன், ஹசன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்றால், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →