உலகம்

வங்கதேசத்தில் 3.1 லட்சம் ரோஹிங்கயா அகதிகள்

DIN

மியான்மரிலிருந்து அண்மையில் வெளியேறி வங்கதேசத்தில் புகலிடம் தேடியுள்ள ரோஹிங்கயா அகதிகளின் எண்ணிக்கை 3.13 லட்சமாக அதிகரித்துள்ளது என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

இது குறித்து ஐ.நா. அகதிகள் நல ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோசப் திரிபுரா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது:
கடந்த மாத இறுதியிலிருந்து மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. ஆனால் கடந்த சில நாட்களில் அகதிகள் வரத்து சற்று குறைந்திருக்கிறது. அகதி முகாம்களில் இடமின்மையால், புதிதாக வரும் அகதிகள் வீதியோரங்களிலும் வெட்டவெளிகளிலும் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவ தன்னார்வ அமைப்புகள், சர்வதேச தொண்டு நிறுவனங்கள், முயன்று வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை சுமார் 4,000 ரோஹிங்கயா அகதிகள் வந்ததாகத் தெரிகிறது.
மியான்மரில் அண்மையில் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளுக்குப் பிறகு வங்கதேசத்தில் புகலிடம் தேடி வந்திருக்கும் ரோஹிங்கயா அகதிகளின் எண்ணிக்கை சுமார் 3.13 லட்சமாக இருக்கும் என்றார் அவர்.
புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மியான்மரின் ரெகினே மாகாணத்தில் பல தலைமுறைகளாக ரோஹிங்கயா பிரிவினர் வாழ்ந்து வருகின்றனர். மியான்மர் இயற்றிய புதிய சட்டங்களைத் தொடர்ந்து முஸ்லிம்களான அப்பிரிவினருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அப்பிரிவினரிடையே தீவிரவாதம் எழுந்தது. அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகள் கடந்த ஆக. 25-ஆம் தேதி ராணுவ முகாம் மீதும் போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல் நிகழ்த்தினர். அதில் 12 ராணுவ வீரர்கள் பலியாகினர். இரு தரப்பினரிடையே நடைபெற்ற சண்டையில் 59 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து ரோஹிங்கயாக்கள் வசிக்கும் கிராமங்களில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அந்த நடவடிக்கையின்போது, பொதுமக்களைத் தாக்குதல், வீடுகளுக்குத் தீவைத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.
ராணுவ நடவடிக்கையில் சுமார் 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மியான்மர் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் வன்முறைப் பகுதிகளிலிருந்து வெளியேறியவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கானவர்கள் வனப் பகுதிகளில் நீண்ட தூரம் நடந்தும், எல்லைப் பகுதியில் உள்ள நாஃப் நதியை நீந்திக் கடந்தும் அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். பலர் படகுகள் மூலமாகவும் நதியைக் கடந்து வங்கதேசம் வந்தனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே ரோஹிங்கயாக்கள் வங்கதேசத்தில் புகலிடம் தேடி வருகின்றனர். எல்லைப் பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் நகரையொட்டி ஐ.நா. மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமில் சுமார் 4 லட்சம் அகதிகள் தங்கியுள்ளனர். இந்த நிலையில், கடந்த இரு வார காலத்தில் மட்டுமே வந்த அகதிகளின் எண்ணிக்கை 3.13 லட்சமாக இருக்கும் என்று ஐ.நா. தெரிவித்திருக்கிறது.


அகதிகள் முகாம் அமைக்க கூடுதல் நிலம்: வங்கதேசம் ஒப்புதல்

புதிதாக வரும் ரோஹிங்கயா அகதிகளுக்குத் தாற்காலிக முகாம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கீடு செய்ய வங்கதேச அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக வங்கதேச வெளியுறவுத் துறை துணை அமைச்சர் முகமது ஷெரியார் ஆலம் கூறியது: தற்போது உள்ள அகதிகள் முகாமுக்கு அருகிலேயே குதுப்பலாங் பகுதியில் புதிய முகாம் அமைக்க பிரதமர் ஷேக் ஹசீனா ஒப்புதல் அளித்துள்ளார். அதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். அங்கு தாற்காலிக கூடாரங்கள் அமைத்து அகதிகள் தங்க வைக்கப்படுவர். அவர்களின் விவரங்களைப் பதிவு செய்த பின்னர் வேறு இடங்களுக்கு அவர்கள் மாற்றப்படுவர் என்றார் அவர்.
ரோஹிங்கயா அகதிகளுக்காகத் தற்போது இரு முகாம்கள் உள்ளன. அவை ஏற்கெனவே நிரம்பி வழிகின்றன. ஷாபுரித்வீப் பகுதி வழியாக நூற்றுக்கணக்கான அகதிகள் திங்கள்கிழமை வந்தனர். கடந்த இரு வாரங்களில் வந்தவர்கள் பள்ளிகள் போன்ற இடங்களிலும் தாற்காலிக கூடாரங்களிலும் தங்க வைக்கப்படுகின்றனர். அந்த இடங்களில் போதிய கழிவறை வசதிகள் இல்லை. எந்த வசதியும் பாதுகாப்பும் இன்றி பலர் வெட்டவெளிகளில் தங்கியுள்ளனர். உணவு, குடிநீர், மருத்துவ உதவியின்றி அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காக்ஸ் பஜார் நகரையொட்டிய ரோஹிங்கயா அகதி முகாம்களை பிரதமர் ஷேக் ஹசீனா செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிடத் திட்டமிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT