கொழும்பு: இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் இலங்கை தமிழ்ப்பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி போடப்படும் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'தி கார்டியன்' நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்கு ஆட்களை அனுப்புவதற்கு என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் தங்கள் வீட்டு வேலை செய்வதற்கு என்று அனுப்பும் பெண்கள் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு கர்ப்பம் ஆக மாட்டார்கள் என்று அங்கு வேலைக்குஅமர்த்துபவர்களிடம் உறுதியளித்து அனுப்புகின்றனர்.
எனவே அதனை நிறைவேற்றும் பொருட்டு இங்கிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தனியாக கருத்தடை ஊசி போடப்படுகிறது.
இது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் பேசும்பொழுது, 'வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுபவர்களுக்கு அரசு சார்பாக ஒருமருத்துவ சோதனை நடைபெறும். அதற்குப் பிறகு நாங்கள் அவர்களுக்கு கருத்தடைக்காக சாதனங்களை அளிக்கிறோம்' என்று தெரிவித்தார். பெரும்பாலான பெண்கள் இதை பற்றி பேசாத பொழுதும் 'டெபோ-ப்ரோவெரா' என்னும் மருந்து ஊசி வழியாக செலுத்தப்படுகிறது என்று தெரியவருகிறது.
இது தொடர்பாக பேசிய ரோஹிணி பாஸ்கரன் என்னும் பெண்கள் உரிமைக்கான போராட்டக் குழுவினைச் சேர்ந்த அதிகாரி, 'பெரும்பாலான பெண்களுக்கு அவர்களுக்கு போடப்படும் ஊசி எதற்காக என்றே தெரிவதில்லை. இதன்மூலம் இரட்டை ஆதாயங்கள் நிறுவனங்களுக்கு அவர்களுக்குக் கிடைக்கிறது. இத்தகைய பெண்களை வேலைக்கு அனுப்பும் முகவர்கள் செய்யும் பாலியல் சீண்டல்களை மறைத்து விடலாம்; அத்துடன் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு கொடுக்கும் வாக்கினைக் காப்பாற்றியதாகவும் அமையும்' என்று தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு உயுத்தத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மரணமடைந்து விட்டதன் காரணமாக, தமிழ்ப்பெண்கள் தங்கள் குடும்பத்தினை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகின்றனர். எனவே அவர்களே இந்த முறையில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.