அமெரிக்க முன்னாள் அதிபர் சீனியர் புஷ் மனைவி காலமானார்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் மனைவியும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷின் தாயாருமான பார்பரா புஷ் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் மனைவியும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷின் தாயாருமான பார்பரா புஷ் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 92.
அமெரிக்காவின் 41-ஆவது அதிபராக கடந்த 1989 முதல் 1993 வரை பதவி வகித்த ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் (சீனியர் புஷ்) மனைவி பார்பரா புஷ். இவர்களுக்கு ஜார்ஜ் வாக்கர் புஷ் உள்பட 5 பிள்ளைகளும், அவர்கள் மூலம் 17 பேரக் குழந்தைகள் மற்றும் 7 கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் ஜார்ஜ் வாக்கர் புஷ் அமெரிக்காவின் 43-ஆவது அதிபராக பதவி வகித்தவர் ஆவார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல், இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த பார்பரா புஷ், ஹூஸ்டனில் செவ்வாய்க்கிழமையன்று காலமானதாகவும், அவர் உயிர் பிரிந்தபோது கணவரும், மகன் ஜார்ஜ் புஷ்ஷும் உடனிருந்ததாக சீனியர் புஷ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி பார்பரா புஷ்ஷின் மறைவுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவியும் தற்போதைய முதல் பெண்மணியுமான மெலேனியா டிரம்ப் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், எழுத்தறிவு மற்றும் குடும்ப அமைப்பின் அடிப்படை மாண்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பார்பரா புஷ் ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டு டிரம்ப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். நியூயார்க்கில் பிறந்தவரான பார்பராவுக்கும், ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷுக்கும் கடந்த 1945-இல் திருமணம் நடைபெற்றது. எழுத்தறிவின் முக்கியத்துவத்துக்காக குரல் கொடுத்து வந்த பார்பரா, குழந்தைகளுக்கான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.