உலகம்

இன்று முதல் அமலுக்கு வருகிறது யேமன் ஒப்பந்தம்

DIN


யேமனின் ஹோடைடா நகரில் அந்த நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை (டி. 18) அமலுக்கு வரும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
யேமனின் முக்கியத்துவம் வாய்ந்த ஹோடைடா நகரம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை மீட்பதற்காக அந்த நகரை அரசுப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை வான்வழித் தாக்குதல் நடத்தி வந்தது.
இதன் காரணமாக ஏராளமானோர் பலியானதோடு, முற்றுகை காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டது.
அதையடுத்து, யேமன் விவகாரங்களுக்கான ஐ.நா. சிறப்புத் தூதர் மார்ட்டின் கிரிஃபித்ஸின் முயற்சியின் பலனாக, இரு தரப்பினருக்கும் இடையே ஸ்வீடனில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.
அதன்படி, சண்டை நடைபெற்று வந்த ஹோடைடா நகரில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
எனினும், அந்தப் பகுதியில் சவூதி தலைமையிலான வான்வழித் தாக்குதல்களும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் பதிலடித் தாக்குதல்களும் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தன.
இந்தச் சூழலில், ஐ.நா. அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
ராணுவரீதியிலான சில காரணங்களால், ஸ்வீடனில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை அரசுப் படையினரும், கிளர்ச்சியாளர்களும் உடனடியாக செயல்படுத்த முடியவில்லை.
எனினும், திங்கள்கிழமை முதல் அந்த ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும் என்றார் அவர்.
யேமனில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்து வந்த அதிபர் அலி அப்துல்லா சலே மக்கள் போராட்டம் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு பதவி விலகினார். எனினும், அவருக்குப் பிறகு அதிபர் பொறுப்பேற்ற மன்சூர் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை.
இதன் காரணமாக, ஹூதி பழங்குடியின கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினர். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் உதவியுடன் அவர்கள் தலைநகரைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து, சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியாவில் அதிபர் மன்சூர் ஹாதி தஞ்சம் புகுந்தார். அவருக்கு ஆதரவாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015-ஆம் ஆண்டு விமானத் தாக்குதலைத் தொடங்கியது. அதையடுத்து யேமன் உள்நாட்டுச் சண்டை தீவிரமடைந்து, சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சூழலில், யேமன் அரசுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை ஸ்வீடனில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT