பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்: இந்தியா - ஓமன் உறுதி
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்; பயங்கரவாத செயல்களுக்காக, மதத்தை தவறாக பயன்படுத்தும் குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்; பயங்கரவாத செயல்களுக்காக, மதத்தை தவறாக பயன்படுத்தும் குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியாவும், ஓமனும் உறுதிபூண்டுள்ளன.
ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு, பிரதமர் மோடி 4 நாள் சுற்றுப் பயணத்தை கடந்த 9-ஆம் தேதி தொடங்கினார். முதல் 3 நாடுகளிலும் பயணத்தை முடித்த அவர், ஓமனுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். தலைநகர் மஸ்கட்டில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஓமன் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத்தை மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம், திறன் வளர்ப்பு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதில் 2 ஒப்பந்தங்கள், வர்த்தகம் மற்றும் உரிமையியல் விவகாரங்களில் சட்டரீதியிலான ஒத்துழைப்பு, சுகாதாரம், சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பானவை. மேலும், தூதரகரீதியிலோ, அரசுமுறை பயணமாகவோ வருவோருக்கு, பரஸ்பரம் விசா விதிவிலக்கு அளிப்பது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கூட்டறிக்கை: இரு தலைவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை தனிமைப்படுத்தவும், பயங்கரவாத செயல்களுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்தும் குழுக்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும் இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன. பிராந்திய அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் இரு நாடுகளுக்கும் பொதுவான பொறுப்புகள் உள்ளன. அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியர்களுடன் சந்திப்பு: இதனிடையே, மஸ்கட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓமன் வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். ஓமனில் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் உள்ளனர்.
தொழில்துறையினருடன் ஆலோசனை: இந்திய - ஓமன் தொழிற்துறையினர் மாநாடு, மஸ்கட்டில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, வளைகுடா, மேற்கு ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த தொழிற்துறை தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ஓமனுக்கான இந்தியத் தூதர் இந்திரா மான் பாண்டே கூறுகையில், "ஓமனில் இந்திய நிறுவனங்கள் அதிகம் உள்ளன. துகும் நகரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்கள் சுமார்ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா - ஓமன் இடையிலான வர்த்தகம் நிகழாண்டில் ரூ.35 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது' என்றார்.
ஓமன் துணைப் பிரதமர்களான சையத் பின் முகமது அல் சையத், சையத் ஆஸாத் பின் தாரிக் அல் சையத் ஆகியோரை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
"இந்திய - ஓமன் உறவில் உத்வேகம்': பின்னர், ஓமன் பயணத்தை நிறைவு செய்யும் முன்பு, சுட்டுரையில் மோடி சில பதிவுகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓமன் சுற்றுப் பயணம், நான் நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த பயணமாகும். எனது இந்தப் பயணம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரு உறவுகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். எனக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பு, நட்புடன் கூடிய உபசரிப்புக்காக சுல்தான் காபூஸூக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மோடி பதிவிட்டுள்ளார்.