உலகம்

ரசாயனத் தாக்குதல் நிரூபணமானால் சிரியா மீது தாக்குதல்: பிரான்ஸ் எச்சரிக்கை

DIN

சிரியாவில் பொதுமக்கள் மீது ராணுவம் ரசாயனத் தாக்குதல் நிகழ்த்தியது நிரூபிக்கப்பட்டால், அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நிகழ்த்துவோம் என்று பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிபர் இமானுவெல் மேக்ரான், தலைநகர் பாரீஸிலுள்ள அதிபர் மாளிகையில் கூறியதாவது:
சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருள்களைக் கொண்டு அந்த நாட்டு அரசுப் படைகள் தாக்குதல் நிகழ்த்தியிருந்தால், அந்த ரசாயன குண்டுகள் ஏவப்பட்ட இடத்திலும், அந்தத் தாக்குதலை ஒருங்கிணைக்கும் பகுதியிலும் நாங்கள் தாக்குதல் நிகழ்த்துவோம்.
எனினும், சிரியா அரசு அத்தகைய தாக்குதல்களை நிகழ்த்தியதற்கான வலுவான ஆதாரங்களை எங்களது உளவு அமைப்புகள் பெறவில்லை.
தற்போதையச் சூழலில், பயங்கரவாதிகளுக்கு எதிரான போருக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். சிரியா அரசைப் பொருத்தவரை, அது மேற்கொள்ளும் போர்க் குற்றங்களுக்கு இப்போதோ, அல்லது உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகோ சர்வதேச சமுதாயத்திடம் பதிலளித்தே தீர வேண்டும்.
சிரியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான சர்வதேச மாநாட்டை நடத்துவது சாத்தியமென்றால், அதனை வரவேற்கிறேன்.
தடை செய்யப்பட்ட குளோரின் ரசாயனப் பொருளை பொதுமக்கள் மீது சிரியா அரசு பல முறை பயன்படுத்தியிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷிய அதிபரை கடந்த வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டு எனது கவலையை வெளிப்படுத்தினேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT