முகப்பு
உலகம்

யுரேனியம் செறிவூட்டலை தீவிரப்படுத்த ஈரான் திட்டம்

அணு ஆயுதத் தயாரிப்புக்கு பயன்படக் கூடிய யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தீவிரப்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
ஈரானின் எஸ்ஃபாகன் நகரில் அமைந்துள்ள யுரேனியம் செறிவூட்டு மையம் (கோப்புப் படம்).
பகிர்:

அணு ஆயுதத் தயாரிப்புக்கு பயன்படக் கூடிய யுரேனியத்தை செறிவூட்டும் பணியை தீவிரப்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
வல்லசு நாடுகளுடன் அந்த நாடு மேற்கொண்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா கைவிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை ஈரான் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஈரான் அணுசக்தி அமைப்பின் தலைவர் அலி அக்பர் சலேஹி கூறியதாவது:
எங்களது எரிசக்தி தேவைகளுக்காக, யுரேனியத்தை செறிவூட்டும் பணியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
சூழல்கள் சரியாக அமைந்தால், எங்களது யுரேனியம் செறிவூட்டும் புதிய மையத்தை நடான்ஸ் பகுதியில் திறக்கும் அறிவிப்பை புதன்கிழமை (ஜூன் 6) இரவே வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்த புதிய யுரேனியம் செறிவூட்டு மையம் திறக்கப்படுவது, வல்லரசு நாடுகளுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறுவது ஆகாது.
காரணம், யுரேனியம் செறிவூட்டல் பணியை புதிதாகத் தொடங்குவதை மட்டுமே அந்த ஒப்பந்தம் தடை செய்கிறதே தவிர, புதிய மையம் திறப்பதற்கு அந்த ஒப்பந்தத்தில் எந்தத் தடையும் இல்லை.
இந்த புதிய யுரேனியம் செறிவூட்டு மையத்தை திறப்பதினால், அணுசக்தி ஒப்பந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தோல்வியடைந்ததாக அர்த்தமில்லை என்றார் அவர்.
தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், 
ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.
ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், அமெரிக்கப் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்று விமர்சித்து வந்த டிரம்ப், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படக் கூடிய யுரேனியத்தை செறிவூட்டும் பணியை அதிகரிக்கவிருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலை அழிப்பதே நோக்கம்
அணு ஆயுதங்களை உருவாக்கி, அதன் மூலம் தங்கள் நாட்டை அழிக்கும் நோக்கத்திலேயே, யுரேனியம் செறிவூட்டலை ஈரான் அதிகரிக்கத் திட்டமிடுவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்கும் எண்ணத்தை ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனி இரு நாள்களுக்கு முன்னர் வெளிப்படுத்தினார்.
தற்போது அந்த எண்ணம் எவ்வாறு நிறைவேற்றப்படப் போகிறது என்பதை ஈரான் விளக்கியுள்ளது. யுரேனியத்தை அணு ஆயுதங்களில் பயன்படுத்தக் கூடிய எரிபொருளாகப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு செறிவூட்டுவதே ஈரான் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் நோக்கமாகும். அந்த நாடு அணு ஆயுதம் பெறுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →