உலகம்

இலங்கை வகுப்புக் கலவரம்: கண்டியில் ஊரடங்கு நீட்டிப்பு

DIN

இலங்கையின் கண்டி பகுதியில் பெளத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தொடரும் வன்முறையை காரணமாக, அந்த மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி புதன்கிழமை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் ருவன் குணசேகரா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பெளத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடைபெற்று வரும் கலவரத்தின் தொடர்ச்சியாக, கண்டியின் புறநகர்ப் பகுதியான மெனிக்ஹின்னாவில் செவ்வாய்க்கிழமை இரவு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவங்களில் 3 போலீஸார் காயமடைந்தனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி அமைதியைக் குலைக்க முயற்சி செய்ததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, கண்டி பகுதியில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக கண்டியின் முக்கிய தேயிலைத் தோட்டங்கள், பெளத்த மையங்களுக்கு காவல்துறை அதிரடிப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி பகுதியில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு செவ்வாய்க்கிழமை காலை விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஏராளமான மசூதிகள், சிறுபான்மையினருக்குச் சொந்தமான வீடுகள் சிங்கள பெளத்த மதத்தினரால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சூழலில், வன்முறைச் சம்பங்கள் தொடர்ந்ததையடுத்து தற்போது ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு பிரிவினர் வசித்து வரும் கண்டி மாவட்டத்தின் தெல்டினியா பகுதியில் பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிம்களால் கடந்த 22-ஆம் தேதி தாக்கப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இந்தக் கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள், வீடுகள், கடைகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, அந்தப் பகுதியில் திங்கள்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு ராணுவமும், அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில், கண்டி மாவட்டம் தெல்டினியா, பல்லிகலே பகுதியில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலம் தீயில் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, செவ்வாய்க்கிழமை மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, நிலமையைக் கட்டுப்படுத்தவற்கு வசதியாக இலங்கையில் அடுத்த 10 நாள்களுக்கு நெருக்கடி நிலையை அதிபர் மைத்ரிபால சிறீசேனா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT