உலகம்

சிரியாவில் தொடரும் சண்டை: நிவாரண வாகனங்கள் நிறுத்திவைப்பு

DIN

சிரியாவில் அரசுப் படைகளால் முற்றுகையிடப்பட்டுள்ள கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நிவாரணப் பொருள்களை வாகனங்கள் மூலம் அனுப்பும் திட்டம் வியாழக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸையொட்டிய கிழக்கு கெளட்டா பகுதியில், அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் சண்டை நடந்து வரும் நிலையில், அந்தப் பகுதியில் சிக்கத் தவித்து வரும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக, ஐ.நா., சிரியா அரபு செம்பிறைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை அனுப்ப முடிவு செய்திருந்தன.
இந்த நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் இங்லி செட்கி கூறியதாவது:
முற்றுகையிடப்பட்ட கிழக்கு கெளட்டா பகுதிக்கு நிவாரணப் பொருள்களை வாகனங்கள் மூலம் வியாழக்கிழமை கொண்டு செல்லும் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
அங்கு, புதிய ராணுவப் பதற்றம் உருவாகி வருவதால், நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கான சூழல் தற்போது அமையவில்லை என்றார் அவர்.
அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள வஃபிதீன் எல்லைச் சாவடியில் ஐ.நா., சிரியா அரபு செம்பிறைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகளின் நிவாரணப் பொருள்களை ஏற்றிய லாரிகள் வியாழக்கிழமை வரிசையாக நிறுத்தப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்துடன், தொடர் குண்டு வீச்சு மற்றும் சண்டை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கெளட்டா மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்லும் பணி சண்டை காரணமாக நிறுத்தப்படுவது இந்த வாரத்தில் இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கெனவே, நிவாரணப் பொருள்களை ஏற்றிக் கொண்டு, பாதுகாப்பு வழித்தடத்தின் மூலம் கிழக்கு கெளட்டா பகுதியை நோக்கிச் சென்ற 46 லாரிகள், தீவிர குண்டுவீச்சு காரணமாக பாதி நிவாரணப் பொருள்களை மட்டுமே அளித்துவிட்டு அவசரமாகத் திரும்பி வந்தன.
சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த கடந்த 2012-ஆம் ஆண்டில், கிழக்கு கெளட்டா பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. 
அதிலிருந்து இந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டிருந்தாலும், தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
எனினும், கடந்த ஓராண்டாக மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு, 2012-ஆம் ஆண்டில் இழந்த கிழக்கு கெளட்டா பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை ராணுவம் மீட்டது.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியுள்ள பகுதியை மீட்கும் முயற்சியாக, சுமார் 4 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களையும், எல்லைக்கு அப்பாலிருந்து எறிகணைத் தாக்குதல்களையும் நிகழ்த்தின.
இந்தத் தாக்குதல்களில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாவும், உயிரிழந்தவர்களில் 120-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்குதல், பதற்றப் பகுதிகளிலிருந்து அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுதல் ஆகிய நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, கிழக்கு கெளட்டாவில் 30 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த நிலையில், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக தினமும் ஐந்து மணி நேரம் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்வதாக ரஷியாவும், சிரியாவும் அறிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

SCROLL FOR NEXT