எகிப்து அதிபராக அல்-சிசி மீண்டும் தேர்வு: 92% வாக்குகள் பெற்று வெற்றி
எகிப்து அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்தெல் ஃபட்டா (63) அல்-சிசி 92 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எகிப்து அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அப்தெல் ஃபட்டா (63) அல்-சிசி 92 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்த நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிபர் தேர்தலின்போது அஸ்வான் மாகாணத்தில் அல்-சிசிக்கு ஆதரவாக 2.56 லட்சம் வாக்குகள் பதிவாகின. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மூஸா முஸ்தஃபா மூஸாவுக்கு 9,563 வாக்குகள் கிடைத்தன. அதேபோல அலெக்ஸாண்டிரியா மாகாணத்தின் சிடி பகுதியில் அல்-சிசிக்கு 83,631 வாக்குகளும், மூஸாவுக்கு 2,474 வாக்குகளும் கிடைத்தன.
இந்தப் பகுதியில் 9.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். அவர்களில் 8.6 லட்சம் வாக்குகளைத் தவிர மற்றவை செல்லாத ஓட்டுகள் ஆகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக அல்-சிசிக்கு ஆதரவாக 2.1 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வாக்களித்தவர்களில் 92 சதவீத வாக்குகளாகும்.
இதையடுத்து, எகிப்து அதிபராக மீண்டும் அல்-சிசி பொறுப்பேற்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
எனினும், தேர்தலின் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் 2-ஆம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் அதிபராக இருந்த முகமது மோர்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. அதனைத் தொடர்ந்து, அப்போது ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த அல்-சிசி, மோர்சியின் அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார்.
அதனைத் தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்ப்புகள் இன்றி போட்டியிட்ட அல்-சிசி, வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்றார். இந்த நிலையில், இந்த ஆண்டுத் தேர்தலிலும் அவர் போட்டியிடுவதாக அறிவித்தார்.
எனினும், இந்தத் தேர்தல் ஒருதலைப்பட்சமாக நடைபெறுவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. இதன் காரணமாக அல்-சிசிக்கு எதிராக யாரும் போட்டியிடாத நிலையில், அதிகம் அறியப்படாத அரசியல்வாதியும், அல்-சிசியின் தீவிர ஆதரவாளருமான மூஸா முஸ்தஃபா மூசா அல்-சிசியை எதிர்த்துப் போட்டியிட்டார்.
இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூன்று நாள்களுக்கு அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் அல்-சிசி மிக எளிதாக வெற்றி பெற்று, மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்பார் என்று ஏற்கெனவே கூறப்பட்டு வந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.