உலகம்

சர்ச்சைக்குரிய ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகம் மாற்றம்

DIN

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலிருந்து தனது தூதரகத்தை சர்ச்சைக்குரிய ஜெருலசேம் நகருக்கு அமெரிக்கா திங்கள்கிழமை மாற்றிக் கொண்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தபடி, இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
இதற்காக நடைபெற்ற திறப்பு விழாவில் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் ஃப்ரெட்மன், பேசியதாவது:
இஸ்ரேல் உருவானபோது அந்த நாட்டுக்கு அமெரிக்காதான் முதல் முறையாக அங்கீகாரம் வழங்கியது.
தற்போது, ஜெருசலேம் நகரில் தூதரகத்தை அமைத்ததன் மூலம், மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு, பல ஆண்டுகளாக பிரார்த்திக்கப்பட்டு வந்த மற்றொரு நடவடிக்கையும் பூர்த்தியாகியுள்ளது.
இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்காதான் மற்றவர்களுக்கு வழிகாட்டும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தொலைநோக்கு, வீரம், நீதியை நிலைநாட்டும் எண்ணம் ஆகியவற்றின் வெளிப்பாடே, தூதரக மாற்றம் ஆகும் என்றார் அவர்.
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஜான் சுலிவன், நிதியமைச்சர் ஸ்டீவன் நுசின், அரசின் முதன்மை ஆலோசகர்களும், டிரம்ப்பின் மகள் மற்றும் மருமகனான இவாங்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னெர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுமே உரிமை கொண்டாடி வரும் சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கவிருப்பதாகவும், தற்போது டெல்-அவிவ் நகரிலுள்ள இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றவிருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அறிவித்தார்.
அதுவரை பாலஸ்தீன விவகாரத்தில் அமெரிக்கா நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த நடுநிலைக்கு எதிரான இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. பல்வேறு நாடுகளில் இந்த முடிவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பது, பாலஸ்தீனப் பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் என்று பலர் எச்சரித்தனர்.
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு ஜெருசலேமை பாலஸ்தீனத் தலைநகராக உலக நாடுகள் அறிவிக்க வேண்டும் என்று அரபு நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகள் வலியுறுத்தின.
ஜெருசலேம் குறித்த டொனால்ட் டிரம்ப்பின் முடிவை நிராகரிப்பதற்கான தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டு வரப்பட்டபோது அந்தத் தீர்மானத்தை அமெரிக்கா தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தது.
இந்தச் சூழலில், திட்டமிட்டபடி அமெரிக்க தூதரகம் டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு திங்கள்கிழமை மாற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT