உலகம்

இலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து வழக்கு: ஐக்கிய தேசிய கட்சி

DIN

இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறீசேனா கலைத்திருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
 இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து அதிபர் சிறீசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி நீக்கினார். இதையடுத்து முன்னாள் அதிபர் ராஜபட்சவை பிரதமராக சிறீசேனா நியமித்தார். இதை ரணில் விக்ரமசிங்கவும், நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யாவும் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தயாராக இருப்பதாக ரணில் அறிவித்தார். இதனால் நாடாளுமன்றத்தை முதலில் முடக்கிய சிறீசேனா, பின்னர் 14ஆம் தேதி கூட்டப்படுவதாக தெரிவித்தார். இருப்பினும், ராஜபட்ச அரசுக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைப்பதில் சந்தேகம் நிலவியது.
 எனவே, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஜனவரி மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று சிறீசேனா வெள்ளிக்கிழமை இரவு அதிரடியாக அறிவித்தார்.
 ஐக்கிய தேசிய கட்சி கண்டனம்: இலங்கை அதிபரின் இந்நடவடிக்கையை ஐக்கிய தேசிய கட்சி கண்டித்துள்ளது. அதிபர் சிறீசேனாவின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வாதிகார நடவடிக்கைகளில் இருந்து அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு நீதிமன்றங்களின் தலையீட்டை ஐக்கிய தேசிய கட்சி கோரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவருமான மங்கள சமரவீரா கூறுகையில், "அதிகரித்து வரும் சிறீசேனாவின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து நீதிமன்றங்கள், நாடாளுமன்றம், தேர்தலில் நாங்கள் போராடுவோம்' என்றார்.
 அதேநேரத்தில், ஐக்கிய தேசிய கட்சியின் குற்றச்சாட்டுகளை சிறீசேனா கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "நாடாளுமன்ற தலைவர் கரு ஜெயசூர்யாவின் நடவடிக்கைகள்தான், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். அதிபரை மீறி, ஜெயசூர்யா சட்டவிரோதமாக உத்தரவுகளை வெளியிட்டு வந்தார்' என்றார்.
 ராஜபட்ச வரவேற்பு: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதை முன்னாள் அதிபரும், சிறீசேனாவால் பிரதமராக நியமிக்கப்பட்டவருமான ராஜபட்ச வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், "தேர்தல் மூலம் நாட்டில் உண்மையான மக்களின் ஆட்சி ஏற்படும்; நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட தேர்தல் வழிவகுக்கும்' என்றார்.
 மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சியின் மூத்த தலைவர் விஜிதா ஹெராத் கூறுகையில், "சட்டத்தை காக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT