நியூயார்க்: அரேபிய தீபகற்ப நாடான ஏமனில் நிலவும் பஞ்சம் நாம் வாழும் காலத்தில் பார்க்கும் மோசமான பஞ்சமாக இருக்கும் என்று ஐ.நா அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரேபிய தீபகற்ப நாடுகளில் ஒன்றான ஏமன் கடந்த மூண்டு ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவளித்து வருகிறது. இவர்கள் தலைநகர் சனா உட்பட நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
ஓயாத உள்நாட்டுப் போரின் காரணமாக விமானத் தாக்குதல் மற்றும் வெடிகுண்டு வீச்சின் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உணவுப்பஞ்சத்தின் காரணமாக தொற்றுநோய் பாதிப்புக்கும் ஆட்பட்டுள்ளனர்.
சமீபத்தில் அந்நாட்டில் ஏற்பட்ட காலரா பாதிப்பின் காரணமாக 10000 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்நாட்டில் உணவுப்பொருட்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில் அரேபிய தீபகற்ப நாடான ஏமனில் நிலவும் பஞ்சம் நாம் வாழும் காலத்தில் பார்க்கும் மோசமான பஞ்சமாக இருக்கும் என்று ஐ.நா அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஐநாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துறைச் செயலர் மார்க் லௌகாக் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஏமன் நாடானது பட்டினியால் உண்டாகும் சாவுகளை சந்திக்கும் தெளிவான ஒரு ஆபத்தை இப்போது எதிர்நோக்கியுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் பாதிபேர் அதாவது 1.4 கோடி பேர், இப்போது உதவியாக வழங்கப்படும் உணவுப்பொருட்களையே நம்பி இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏறக்குறைய 80 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தேவைப்படும் அனைவருக்கும் உதவ இயலவில்லை.
ஏமன் இப்போது எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தானது இத்துறையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழும் காலத்தில் பார்க்கும் மோசமான பஞ்சமாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.