காடலோனியாவுக்கு கூடுதல் அதிகாரம்: ஸ்பெயின் பிரதமர் யோசனை
தனி நாடு கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் காடலோனியா மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஷெஸ் தெரிவித்துள்ளார்.
தனி நாடு கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் காடலோனியா மாகாணத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஷெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
காடலோனியாவுக்கு சுயாதிகாரம் அளிப்பது குறித்து மக்களின் கருத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அது கூடுதல் அதிகாரத்துக்கான பொதுவாக்கெடுப்பாக மட்டுமே இருக்க வேண்டும். சுய நிர்ண உரிமைக்கான வாக்கெடுப்பாக இருக்கக் கூடாது என்றார் அவர்.
ஸ்பெயினைச் சேர்ந்த காடலோனியா மாகாணத்தை தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தங்களுக்கென்று தனி மொழியைக் கொண்ட காடலோனியாவுக்கு, கடந்த 1978-ஆம் ஆண்டு சுயாட்சி உரிமை வழங்கப்பட்டது. மேலும், கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் காடலோனியாவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதற்கு 73 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், காடலோனியாவில் ஸ்பெயின் மொழியைவிட காடலோனிய மொழிக்கு கூடுதல் அந்தஸ்து அளிப்பது, காடலோனியாவுக்கான தனி கொடி, தனி நாடு என்ற அங்கீகாரம் போன்ற பல்வேறு தீர்மானங்கள் அந்த மாகாண அரசு கடந்த 2010-ஆம் ஆண்டு நிறைவேற்றியது.
எனினும், மாகாண அரசின் அந்த முயற்சிகளை ஏற்க மறுத்த ஸ்பெயின் அரசு, அந்தத் தீர்மானங்களை ரத்து செய்தது.