உலகம்

சூடானில் புதிய அதிபரும் ராஜிநாமா: 2 நாள்களில் இரு ஆட்சிமாற்றம்

தினமணி

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தலைமைத் தளபதியும் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனால் அந்நாட்டில் கடந்த 2 நாள்களில் இரு ஆட்சிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
 சூடான் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்து வந்த ஒமர் அல் பஷிர், ராணுவத்தால் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, சூடான் அதிபராக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அவத் இபின் அல்ப் (படம்) வியாழக்கிழமை பதவியேற்றார்.
 இந்நிலையில், சூடான் ராணுவ கவுன்சில் அரசியல் விவகாரத் தலைவர் ஒமர் ஜெயின் அல்-அபின், அரேபிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது அவர்களிடம், "இது ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு அல்ல; போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு மட்டுமே ராணுவம் ஆதரவு அளித்தது' என்றார்.
 இது சூடான் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து ராணுவ தலைமைத் தளபதி அவத் இபின் ராஜிநாமா செய்தார்.
 இதுகுறித்து சூடான் நாட்டு மக்களுக்கு அவர் உரை நிகழ்த்துகையில், "ராணுவ கவுன்சில் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்கிறேன். எனக்குப் பதிலாக, அப்பதவிக்கு ஜெனரல் அப்தல் பட்டா அல் -பர்கான் அப்துல்ரகுமானை நான் தேர்வு செய்துள்ளேன். ஆட்சிக் கப்பலை பாதுகாப்பான இடத்துக்கு செலுத்துவதற்கு அப்துல்ரகுமானின் அனுபவம் மற்றும் தகுதி உதவும் என்று நம்புகிறேன்' என்றார்.
 இதேபோல், சூடான் தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக இருந்த சலே கோஷும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
 வரவேற்பு; கொண்டாட்டம்: முன்னாள் அதிபர் பஷிருக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்திய சூடான் புரபசனல்ஸ் கூட்டமைப்பு, அதிபர் பதவியிலிருந்து அவத் இபின் ராஜிநாமா செய்திருப்பதை வரவேற்றுள்ளது. அந்த அமைப்பு கூறுகையில், "அவத் இபின் பதவி விலகல், மக்களுக்கு கிடைத்த வெற்றி' எனக் குறிப்பிட்டுள்ளது.
 ஒமர் அல் பஷிரை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டு, ராணுவ தளபதி அதிபராக பொறுப்பேற்றதற்கு சூடான் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இந்நிலையில், அதிபர் பதவியிலிருந்து ராணுவ தளபதி ராஜிநாமா செய்திருப்பது சூடான் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சூடான் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். கர்தோமின் முக்கிய வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 சூடானில் முந்தைய அதிபர் பஷிருக்கு எதிராக கடந்த டிசம்பர் மாதம் பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்றும், ஆட்சி மாற்றத்துக்கு 2 ஆண்டுகாலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ராணுவ தலைமை தளபதி அவத் இபின் தெரிவித்தார். இதனிடையே, இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் பஷிருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் 2 கைது வாரண்டுகளை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, போராட்டத்தின் தீவிரம் அதிகரித்தது. இதையடுத்து, பஷிரை ஆட்சியிலிருந்து அகற்றுவது தொடர்பான அறிவிப்பை ராணுவ தளபதி அவத் இபின் வியாழக்கிழமை வெளியிட்டார். இதையடுத்து, ஆட்சி பொறுப்பை ராணுவ கவுன்சில் ஏற்றது. அதன் தலைவராக இருந்த அவத் இபின், அதிபராக பொறுப்பேற்றார். அவரையும் புதிய அதிபராக சூடான் போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. சிவில் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

கோவில்பட்டி, எப்போதும் வென்றான் பகுதிகளில் இன்று மின் தடை

SCROLL FOR NEXT