உலகம்

வன்முறை காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது: ஹாங்காங் போலீஸார் விளக்கம்

DIN


போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாகவே ஆர்ப்பாட்டக்களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ஹாங்காங் போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 
ஜனநாயகத்துக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்கள் வன்முறை பாதைக்கு திரும்பியது. 
டிசுன் வான் புறநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  ஆர்ப்பாட்டப் பேரணியில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர். சிலர் கற்களையும், ஆயுதங்களையும் கொண்டு அதிகாரிகளை தாக்கத் தொடங்கினர். 
இதில், 15 பேர் காயமடைந்தனர். 
கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவே போலீஸார், பீரங்கிகளைக் கொண்டு தண்ணீரை பீய்ச்சியடித்து போராட்டக்காரர்களை கலைத்தனர். 
மேலும், வன்முறையில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் விதமாக வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.
சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்டவை  தொடர்பாக 12 வயது சிறுவன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு நாடுகடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை அந்த நகர பேரவையில் நிறைவேற்றுவதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 3 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
ஹாங்காங் அரசின் தலைமை அதிகாரி கேரி லாம் பதவி விலக வேண்டும், ஜனநாயக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் மீது விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  
தன்னாட்சிப் பிரதேசமான ஹாங்காங்கை சீனாவிடம் பிரிட்டன் ஒப்படைத்ததற்குப் பிறகு அங்கு சீன ஆளுகைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரிய சவாலாக இந்தப் போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன. 
இந்தச் சூழலில் போராட்ட களத்தில் தற்போது போலீஸாரும் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT