உலகம்

குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: ஐ.நா. நீதிமன்றத்தில் நாளை விசாரணை

தினமணி

பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம், இந்திய அரசு தனது வாதத்தை முன்வைக்கவுள்ளது.
 ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி கடந்த வியாழக்கிழமை நடத்திய தற்கொலைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்ததால், இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் விசாரணைக்கு வருகிறது.
 இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை, பலூசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்தது.
 பாகிஸ்தானில் உளவு வேலை பார்த்தாகவும், பயங்கரவாதத்தை தூண்டியதாகவும், அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், பணி நிமித்தமாக ஈரானுக்குச் சென்ற அவர், பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்லப்பட்டதாக, இந்திய அரசு வாதிட்டது.
 மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்காததால், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை இந்திய அரசு நாடியது. சர்வதேச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தது. இதையடுத்து, இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் தங்களது வாதங்களை சர்வதேச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தன.
 வழக்கின் அடுத்த விசாரணை, சர்வதேச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது, குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று இந்திய தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட உள்ளனர்.
 மேலும், குல்பூஷண் ஜாதவ், இந்தியத் தூதரகம் மூலம் உதவி பெறுவதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுக்கும் விவகாரம் குறித்தும் இந்திய வழக்குரைஞர்கள் முறையிடவுள்ளனர்.
 குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்யாவிடில், அந்நாட்டு அரசு சர்வதேச சட்டத்தை மீறியதாகக் கருதப்படும் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
 அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தரப்பு வழக்குரைஞர்கள், தங்களது வாதத்தை, வரும் செவ்வாய்க்கிழமை முன்வைக்க உள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல் கட்டம் 66.14%, 2-ஆம் கட்டம் 66.71% வாக்குப் பதிவு

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT