உலகம்

பாக். அரசுக் கட்டுப்பாட்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது தலைமையகம்

DIN


ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த அமைப்பின் தலைமையகம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹாவல்பூரில் அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
முன்னதாக, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை வெளியிட்டது; சர்வதேச நாடுகள் தொடர்ந்து அளித்த நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அரசுக் கட்டுப்பாட்டில் தலைமையகம்: இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் இம்ரான் கான் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 
அதன்படி ஜெய்ஷ்-ஏ-முகமது, ஜமா-ஏ-மஸ்ஜித், மதரஸாதுல் சபீர் ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வந்த வளாகத்தை பஞ்சாப் மாகாண அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. 
அவற்றை அரசு சார்பில் நிர்வகிக்க நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அமைப்புகள் இஸ்லாமிய போதனை வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதில் 70 ஆசிரியர்களும், 600 மாணவர்களும் உள்ளனர். பஞ்சாப் மாகாண போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நடவடிக்கை: லாகூரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் பஹாவல்பூர் அமைந்துள்ளது. 


இந்தியாவில் ராஜஸ்தான் எல்லை அருகில் அந்த இடம் உள்ளது. முன்னதாக, ஹபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பு மற்றும் ஃபலாஹ்-ஏ-இன்சானியத் தொண்டு நிறுவனம் ஆகியவற்றை தடை செய்வதாக பாகிஸ்தான் அரசு வியாழக்கிழமை அறிவித்தது. 2008-இல் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஹஃபீஸ் சயீது மூளையாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமாத்-உத்-தாவாவை தடை செய்த பாகிஸ்தான், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய மசூத் அஸார் தலைமையிலான ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. 
இந்நிலையில், ஜெய்ஷ்-ஏ-முகமது தலைமையகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைள் மூலம் தங்கள் நாட்டு மண்ணில் பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன என்பதை பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. முன்னதாக, எந்த ஆதாரங்களும் இல்லாமல் புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா தங்களைக் குற்றம்சாட்டுகிறது என்று பாகிஸ்தான் கூறியிருந்தது.
தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில்...: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை தூண்டும் அமைப்புகள் அனைத்தும் பாகிஸ்தானில் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தானில் பல்வேறு மத போதனைப் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை அவை நடத்தி வருகின்றன. எனினும், மறைமுகமாக காஷ்மீரில் பயங்கரவாதத்தை தூண்டுவது, அதற்கு நிதியளிப்பது, ஆயுதங்களை அளிப்பது, காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஐ.நா. கண்டன அறிக்கையை தாமதப்படுத்திய சீனா    
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையில் அந்தத் தாக்குதலை பயங்கரவாதம் எனக் குறிப்பிடுவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவேதான் புல்வாமா தாக்குதல் குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கை ஒருவார காலம் தாமதமாகியுள்ளது என்ற விவரம் இப்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட மறுநாளே அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட ஐ.நா. பாதுகாப்பு  கவுன்சில் முடிவு செய்தது. 
எனினும், அந்த கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளில் ஒன்றான சீனா, அந்த அறிக்கை வெளியாவதைத் தாமதப்படுத்த தீவிர முயற்சி செய்தது. கண்டன அறிக்கை வெளியீட்டை கடந்த 18-ஆம் தேதி வரை தள்ளிவைக்க வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டது.
மேலும், புல்வாமா தாக்குதலை மிகக் கடுமையாகக் கண்டிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நோக்கத்தை மழுங்கடிக்கும் வகையில், அறிக்கையில் பல்வேறு திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் சீனா வலியுறுத்தியது. அறிக்கையில் புல்வாமா தாக்குதல் பயங்கரவாதம் எனக் குறிப்பிடப்படுவதையும் சீனா எதிர்த்தது.
இவ்வாறு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்ததால்தான் கண்டன அறிக்கையை வெளியிடுவது ஒரு வாரம் தள்ளிப் போனது. இதற்கிடையே, புல்வாமா தாக்குதலுக்கு எதிரான கண்டன அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிடுவதைத் தடுப்பதற்காக பாகிஸ்தானும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
எனினும், சீனாவின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்கா உள்ளிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பிற உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் அந்த கண்டன அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT