முகப்பு
உலகம்

சீன பொருள்கள் மீது கூடுதல் வரி: காலக்கெடு நீட்டிக்கப்படும்

சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரிவிதிப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 1:11 am IST
பகிர்:


சீனப் பொருள்கள் மீது கூடுதல் வரிவிதிப்புக்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
வர்த்தகப் போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா-சீனா இடையே பேச்சுவார்த்தை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சீனப் பிரதிநிதிகள் அமெரிக்கா சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வரி விதிப்பு தொடர்பாக சீன அதிபர் ஷி ஜின்பிங்கை  ப்ளோரிடாவில் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளதாகவும், அப்போது உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், சீன பொருள்கள் மீதான வரிவிதிப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரை செய்தியில் கூறியுள்ளதாவது:
வர்த்தக உறவுகள் தொடர்பாக சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை திருப்தியாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இருந்தது. குறிப்பாக இந்த பேச்சுவார்தையின் போது, அறிவு சார் சொத்துரிமை பாதுகாப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், வேளாண்மை, சேவைகள், கரன்ஸி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சிறப்பான முறையில் விவாதிக்கப்பட்டது.
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பேச்சுவார்தை நடைபெற்றதையடுத்து மார்ச் 1 முதல் அமலுக்கு வரவுள்ள சீன பொருள்கள் மீதான வரிவிதிப்பு காலக்கெடுவை மேலும் நீட்டிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுட்டுரையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா மிகப்பெரிய சக்தி: அணு ஆயுதம் இல்லாமலேயே வடகொரியா உலகின் மிகப்பெரிய சக்தி கொண்ட நாடாக திகழ முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வியத்நாமில் பிப்ரவரி 27-28 தேதிகளில் இரண்டாவது முறையாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப்பேச உள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில்,  சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் மாநாட்டைப் போலவே இரண்டாவது மாநாட்டிலும் பேச்சுவார்த்தை முன்னேற்றமான நிலையில் தொடரும் என இருதரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.