உலகம்

நவாஸ் மகளுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது பாக். ஊழல் தடுப்பு நீதிமன்றம்

DIN

அவென்ஃபீல்டு அடுக்குமாடிக் குடியிருப்பு ஊழல் வழக்கில் சொத்து தொடர்பாக போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. 
கடந்த 2006-ஆம் ஆண்டு தாக்கல் செய்த சொத்து தொடர்பான ஆவணங்களில் பொதுப் பயன்பாட்டில் இல்லாத "கேலிப்ரி' எழுத்துகள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஆவணம் போலியானது எனக் கூறி மரியம் நவாஸூக்கு எதிராக பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. 
அந்த மனுவை விசாரித்த நீதிபதி முகமது பஷீர் முதலில் தீர்ப்பை சற்று ஒத்திவைத்தார். பின்னர் மரியம் நவாஸூக்கு எதிரான அந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார். 
தீர்ப்பு தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்ட மரியம் நவாஸ், "அவென்ஃபீல்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில், எனக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு இந்த வழக்கு மீண்டும் நினைவுக்கு வந்துள்ளது' என்றார். 
பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் துணைத் தலைவரான மரியம் நவாஸ், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு தனது கணவர் முகமது சஃப்தார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் வந்திருந்தார். அவர் "நவாஸ் ஷெரீஃபை விடுதலை செய்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையை அணிந்து வந்திருந்தார். 
முன்னதாக, நீதிமன்றத்துக்கு வெளியே மரியம் நவாஸின் ஆதரவாளர்கள் பலர் திரண்டு அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றப் பகுதியில் அமைதியை சீர்குலைத்ததாக போலீஸார் அவர்களைக் கைது செய்து அப்புறப்படுத்தினர். 
தனது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதற்காக கண்டனம் தெரிவித்த மரியம் நவாஸ், தான் இஸ்லாமாபாதில் இருப்பதைக் கண்டு பாகிஸ்தான் அரசு அஞ்சுவதாகக் கூறினார். 
அவென்ஃபீல்டு வழக்கில் மரியம் நவாஸூக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அந்த தண்டனையை ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT