உலகம்

சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள் கொள்முதல்: கம்போடியா தகவல்

DIN


சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கிலான ஆயுதங்களைக் கொள்முதல் செய்திருப்பதாக கம்போடியா தெரிவித்துள்ளது.
கம்போடியாவின் சிஹானோக்வில் நகரில் சீனாவின் போர்க்கப்பல்களை நிறுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை கம்போடிய அரசு மறுத்த நிலையில், ஆயுதங்கள் கொள்முதல் தொடர்பான தகவலை அந்நாடு வெளியிட்டுள்ளது.
சிஹானோக்வில் நகரில் சீனாவின் முதலீட்டுடன் கட்டப்பட்டு வரும் அரங்கினை கம்போடிய நாட்டின் பிரதமர் ஹூன் சென் திங்கள்கிழமை பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சீனாவிலிருந்து ஆயிரக்கணக்கிலான ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன். அவற்றை சீனா ஏற்றுமதி செய்துவிட்டது. விரைவில் அந்த ஆயுதங்கள் நாட்டை வந்தடையும். ஏற்கெனவே சீனாவிலிருந்து ரூ.2,030 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய நிகழாண்டில் மட்டும் ரூ. 280 கோடியை செலவிட்டுள்ளோம் என்றார் பிரதமர் ஹூன் சென்.
இருந்தபோதிலும், ஆயுதங்களின் விவரங்கள் குறித்த தகவலை அவர் தெரிவிக்கவில்லை. கம்போடிய நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களில் சீனா மிக அதிக அளவில் முதலீடு செய்துள்ளது. சிஹானோக்வில் நகருக்கு அருகேயுள்ள ரீம் கடற்படைத் தளத்தில், போர்க்கப்பல்களை நிறுத்திக்கொள்ளவும், போர்த் தளவாடங்களை வைத்துக்கொள்ளவும் சீனாவுக்கு கம்போடிய அரசு அனுமதி அளித்திருப்பதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. 
ஆனால், இதற்கு கம்போடிய அரசு மறுப்பு தெரிவித்தது. மேலும், யாரும் எதிர்பாராத விதமாக ரீம் கடற்படைத் தளத்துக்குள் செய்தியாளர்களை அழைத்துச் சென்று, போர்க்கப்பல்களை நிறுத்திக்கொள்ள சீனாவுக்கு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என்பதை கம்போடியா உறுதிசெய்தது. ராணுவ இடங்களுக்குள் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படாமலிருந்த நிலையில், கம்போடிய அரசின் இந்த நடவடிக்கை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  
தென்சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், அந்நாட்டுடன் கூட்டு ராணுவப் பயிற்சியிலும் கம்போடியா ஈடுபட்டது. தாய்லாந்து வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ள ரீம் கடற்படைத் தளத்திலிருந்து சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியை எளிதில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT