உலகம்

பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு மோடி வாழ்த்து: இம்ரான் வரவேற்பு

DIN

பாகிஸ்தான் தேசிய தினத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த வாழ்த்துக்கு அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே சுமுகமான சூழல் இல்லாத போதிலும் பாகிஸ்தானுக்கு பிரதமர் வாழ்த்துக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், உலக நாடுகளின் பண்டிகைகள், தினங்கள் உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவிக்கும் மரபின் அடிப்படையிலேயே இந்த வாழ்த்துச் செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த அதிகாரிகள் மேலும் கூறுகையில், ""பயங்கரவாதம் அல்லாத பகுதியாக தெற்காசியா இருக்க வேண்டியதன் அவசியத்தை வாழ்த்துச் செய்தியில் பிரதமர் எடுத்துரைத்துள்ளார். 
குறிப்பாக, ஜனநாயகம், அமைதி, வளமான பிராந்தியத்தை உருவாக்கவும், வன்முறை, பயங்கரவாதம் அற்ற சூழலை உருவாக்கவும் இந்தத் துணைக் கண்டத்தின் மக்கள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்'' என்று தெரிவித்தனர். 
இம்ரான் வரவேற்பு: இந்நிலையில், சுட்டுரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் வெளியிட்டுள்ள பதிவில், ""எங்கள் மக்களுக்கு பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியை வரவேற்கிறேன்.  தேசிய தினத்தை நாங்கள் கொண்டாடி வரும் இந்த வேளையில், முக்கியப் பிரச்னையான காஷ்மீர் உள்பட அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காண்பதற்கான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு இதுவே சரியான தருணம் எனக் கருதுகிறேன். இருநாட்டு மக்களிடையே அமைதி மற்றும் வளம் அடிப்படையில் புதிய பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் புறக்கணிப்பு: முன்னதாக, பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு இந்திய அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சியில் காஷ்மீர் பிரிவினைவாதிகளும் கலந்து கொண்டதையொட்டி மத்திய அரசு அதை புறக்கணித்தது.
அதே சமயம், எல்லை தாண்டிய பயங்கரவாதம் இருக்கும் வரையில் பேச்சுவார்த்தை என்பது சாத்தியமில்லை என்று இந்தியா தெளிவுபடக் கூறியிருந்தது.
கடந்த ஆண்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியும் பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் படுகொலை செய்ததைத் தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT