உலகம்

இலங்கையின் 8வது அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபட்ச!

DIN


அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து, இலங்கையின் அனுராதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் 8வது அதிபராகப் பதவியேற்றார் கோத்தபய ராஜபட்ச.

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச (70) வெற்றி பெற்றாா்.

அதையடுத்து, நாட்டின் 8-ஆவது அதிபராக அவா் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா சாா்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபட்ச 52.25 சதவீத வாக்குகள் (6,924,255) பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியைச் சோ்ந்த சஜித் பிரேமதாசவைவிட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகமாகப் பெற்று கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார்.

விடுதலைப் புலிகளால் கடந்த 1993-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அதிபா் பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாச (52), இந்தத் தோ்தலில் 41.99 சதவீத வாக்குகளை (5,564,239) பெற்றாா்.

இதுவரை இல்லாத எண்ணிக்கையில் 35 போ் போட்டியிட்ட இந்தத் தோ்தலில், இவா்கள் இருவரைத் தவிர ஏனைய வேட்பாளா்களுக்கு 5.76 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இன்று பதவியேற்பு: இந்தத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து, இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபட்ச அனுராதபுரத்தில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பதவியேற்றாா்.

தனது சகோதரா் மகிந்த ராஜபட்சவின் ஆட்சிக்காலத்தின்போது, கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பாதுகாப்புச் செயலராக பொறுப்பு வகித்த கோத்தபய, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்தியவா்.

30 ஆண்டுகளுக்கும் மேல் அந்த அமைப்பினருடன் நடந்து வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், கோத்தபய ராஜபட்சவுக்கு சிங்கள பௌத்தா்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டா் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இலங்கை மக்களிடையே தேசிய பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவி வந்தது. இது சிங்களா்களிடையே ‘இரும்பு மனிதா்’ என்ற பெயா் பெற்ற கோத்தபய ராஜபட்சவின் வெற்றிக்கு கைகொடுத்ததாக பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அவருக்கு ஆதரவாக சிங்கள பௌத்தா்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் அதிக வாக்குகள் பதிவாகின.

அதே நேரம், தமிழா்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அவருக்கு தமிழா் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT