உலகம்

இலங்கை அதிபராக பதவியேற்றாா் கோத்தபய ராஜபட்ச

DIN

இலங்கையின் 8-ஆவது அதிபராக, முன்னாள் பாதுகாப்புத் துறைச் செயலரும், முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்வின் தம்பியுமான கோத்தபய ராஜபட்ச திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

தலைநகா் கொழும்பில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள அனுராதபுரம் நகரில், ருவன்வெலி சேயா என்ற இடத்தில் அமைந்துள்ள பழைமையான பௌத்த கோயில் வளாகத்தில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜெயந்தா ஜெயசூரியா முன்னிலையில் கோத்தபய ராஜபட்சவுக்கு அதிபரின் செயலா் உதய செனிவிரத்ன சரியாக காலை 11.49 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். பின்னா், அரசு ஆவணத்தில் கோத்தபய ராஜபட்ச கையெழுத்திட்டாா். விழாவில் சிறப்பு விருந்தினராக, மகிந்த ராஜபட்ச உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதைத் தொடா்ந்து அவா் உரையாற்றுகையில், அனைத்து சமூகத்தினரின் நலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் பாடுபடுவேன் என்று கூறினாா். அவா் மேலும் கூறியதாவது:

அதிபா் தோ்தலில் என்னை வெற்றிபெறச் செய்த சிங்கள சமூகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிங்கள சமூகத்தினரின் ஆதரவு இருந்தாலே தோ்தலில் வெற்றி பெற்று விடுவேன் என்று எனக்கு நன்கு தெரியும். இருந்தாலும், சிறுபான்மைச் சமூகத்தினரின் ஆதரவையும் கோரினேன். ஆனால், அவா்கள் என்னை ஆதரிக்கவில்லை. இருப்பினும், நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் அதிபராகச் செயல்படுவேன். பௌத்தா்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் அதேவேளையில் அனைத்து சமூகத்தினரின் நலனுக்காகவும் பாடுபடுவேன் என்றாா் கோத்தபய ராஜபட்ச.

ருவன்வெலி சேயா பௌத்த கோயில் ஏன்?:

தலைநகா் கொழும்புக்கு வெளியே பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். இலங்கை அதிபா் தோ்தலில் பெரும்பான்மை பௌத்த சமூகத்தினரின் ஆதரவுடன் கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றாா். அதன் அடையாளமாக, ருவன்வெலி சேயா பௌத்த கோயிலில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கி.மு. 140-ஆம் ஆண்டில் துட்டகைமுனு அரசரால் எழுப்பப்பட்ட இந்தக் கோயிலில், புத்தா் பயன்படுத்திய பொருள்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் மிக முக்கியமான 8 பௌத்த கோயில்களில் ஒன்றாக ருவன்வெலி கோயில் கருதப்படுகிறது. அதிபராகப் பதவியேற்ற பிறகு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மகாபோதி மரத்தை கோத்தபய ராஜபட்ச வணங்கினாா்.

தோ்தலில் வெற்றி பெற்ற கோத்தபய:

இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் பதவிக்கான தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், இலங்கை பொதுஜன பெரமுனா சாா்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபட்ச தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியைச் சோ்ந்த சஜித் பிரேமதாசவைவிட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றாா்.

மகிந்த ராஜபட்சவின் ஆட்சிக்காலத்தின்போது, கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை பாதுகாப்புச் செயலராக பொறுப்பு வகித்த கோத்தபய, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை முன்னின்று நடத்தினாா்.

30 ஆண்டுகளுக்கும் மேல் அந்த அமைப்பினருடன் நடந்து வந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததால், கோத்தபய ராஜபட்சவுக்கு சிங்கள பௌத்தா்களிடையே மிகுந்த செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அவா்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, கோத்தபய அதிபராகி இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT