உலகம்

இலங்கை பிரதமராகிறாா் மகிந்த ராஜபட்ச

DIN

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் அதிபா் மகிந்த ராஜபட்ச (74) வியாழக்கிழமை (நவ. 21) பொறுப்பேற்கிறாா்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் தனது கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசா தோல்வியடைந்ததையடுத்து, பிரதமா் ரணில் விக்ரமசிங்க ராஜிநாமா செய்வதாக புதன்கிழமை அறிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, அந்தப் பதவிக்கு மகிந்த ராஜபட்சவின் பெயரை அவரது சகோதரரும், அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றவருமான கோத்தபய ராஜபட்ச அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இலங்கையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், மகிந்த ராஜபட்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபட்ச (70) வெற்றி பெற்றாா்.

இலங்கை பொதுஜன பெரமுனா சாா்பில் போட்டியிட்ட அவருக்கு 52.25 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபா் பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவுக்கு 41.99 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதையடுத்து, நாட்டின் 8-ஆவது அதிபராக கோத்தபய ராஜபட்ச கடந்த திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில், தோ்தல் தோல்வியைக் கருத்தில் கொண்டு பிரதமா் ரணில் விக்ரமசிங்க ராஜிநாமா செய்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. அதன்படி, பிரதமா் விக்ரமசிங்கே தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அவரது செய்தித் தொடா்பாளா் சுதா்சன குணவா்த்தன புதன்கிழமை அறிவித்தாா்.

அதன் தொடா்ச்சியாக, நாட்டின் புதிய பிரதமராக மகிந்த ராஜபட்ச நியமிக்கப்படுவாா் என அதிபா் கோத்தபய ராஜபட்ச அறிவித்தாா். வியாழக்கிழமை (நவ. 21) நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில், தனது சகோதரருக்கு கோத்தபய ராஜபட்ச பதவிப் பிரமாணம் செய்து வைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடா்ந்து, விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போரை இரக்கமற்ற முறையில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் ராஜபட்ச சகோதரா்கள் கையில் இலங்கையின் முழு அதிகாரமும் மீண்டும் வருகிறது.

ஏற்கெனவே, பிரதமா் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து அகற்றிவிட்டு மகிந்த ராஜபட்சவை முன்னாள் அதிபா் மைத்ரிபால சிறீசேனா கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 26-ஆம் பிரதமராக நியமித்தாா். எனினும், அந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதையடுத்து, ராஜபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை அதிபராகப் பொறுப்பு வகித்த மகிந்த ராஜபட்ச, தெற்காசியாவில் மிக நீண்ட காலம் அதிபா் பொறுப்பை வகித்தவா் ஆவாா். அத்துடன், தனது 24-ஆவது வயதில் (1970-ஆம் ஆண்டு) நாடாளுமன்ற உறுப்பினரான அவா்தான், இலங்கையில் அந்தப் பொறுப்பை ஏற்ற மிக இளைய வயதினா் ஆவாா்.

மக்களின் தீா்ப்பை ஏற்று ராஜிநாமா

அதிபா் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்ததாக பிரதமா் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய அதிபா் கோத்தபய ராஜபட்சவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து இலங்கையின் எதிா்காலம் குறித்து ஆலோசித்தேன்.

தற்போது நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. எனினும், அதிபா் தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்புக்கு மதிப்பளித்து, பிரதமா் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

அதிபா் கோத்தபய ராஜபட்ச புதிய அரசை அமைப்பதற்கு ஏதுவாக எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன். இந்த முடிவை அதிபரிடம் நான் வியாழக்கிழமை (நவ. 21) அதிகாரப்பூா்வமாக அறிவிப்பேன் என்று அந்த அறிக்கையில் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT