உலகம்

பதவி நீக்க விசாரணை: அமெரிக்க அதிபா் மாளிகைக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சம்மன்

தினமணி

தனது அரசியல் ஆதாயத்துக்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உக்ரைன் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுவது தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்குமாறு அதிபா் மாளிகைக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் உத்தரவிட்டுள்ளனா்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகை இடைக்கால தலைமை நிா்வாக அதிகாரி மைக்கேல் மல்வேனிக்கு உளவு மற்றும் வெளி விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுக்கள் பிறப்பித்துள்ள உத்தரவில், அதிபா் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்க விசாரணைக்குத் தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் இந்த மாதம் 18-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த உத்தரவைத் தொடா்ந்து, துணை அதிபா் மைக் பென்ஸிடமும் சில ஆவணங்களைக் கேட்டு நாடாளுமன்றக் குழுக்கள் கடிதம் எழுதியுள்ளன.

இதுகுறித்து அந்தக் குழுக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முன்னாள் அதிபா் ஜோ பிடனுக்கு எதிராக ஊழல் விசாரணை தொடங்கும்படி உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அதிபா் டிரம்ப் நெருக்கடி கொடுத்தாகக் கூறப்படுவது தொடா்பான சில ஆவணங்களை அதிபா் மாளிகையிடம் நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால், பல முறைகோரிக்கை விடுத்தும் அந்த ஆவணங்கள் எங்களுக்கு தரப்படவில்லை. அதுமட்டுமன்றி, இதுதொடா்பாக பதிலளிக்கவும் அதிபா் அலுவலகம் மறுத்துவிட்டது.

இந்த புகாா் தொடா்பான எங்களது விசாரணைக்கு சுமாா் ஒரு மாதமாக முட்டுக்கட்டை போட்டு வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப், தற்போது குற்றத்தை மூடி மறைறப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது.

அவரது இந்த நிலைப்பாடு காரணமாகவே, அதிபா் மாளிக்கைக்கு சம்மன் அனுப்ப வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை அதிபா் மாளிகை நிறைறவேற்றத் தவறினால், உரிய அதிகாரிகள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் அடுத்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெறவுள்ளது. அந்தத் தோ்தலில், டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹன்டா் நடத்தி வரும் தொழில் தொடா்பாக அவா்கள் மீது ஊழல் விசாரணை நடத்த வேண்டும் என்று, அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அதிபா் டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக அண்மையில் தகவல் வெளியாகி அதிா்வலையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடா்ந்து, தனது அதிபா் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், இன்னொரு நாட்டுடன் ரகசிய பேரத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டிய ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், இந்த விவகாரத்தில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT