உலகம்

பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியால்  உலகப் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தல்: நிர்மலா சீதாராமன்

DIN

வாஷிங்டன்: "பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளும் உலக பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளன' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) வருடாந்திரக் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "உறுப்பு நாடுகளுக்கு கடன் வழங்குவதற்கான சர்வதேச செலாவணி நிதியத்தின் கொள்கைகளில், பயங்கரவாதத்துக்கான நிதி மற்றும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்பு தொடர்பான முக்கிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் பயங்கரவாத நிதி தடுப்பு விதிமுறைகளை உறுப்பு நாடுகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய முடியும்' என்றார்.

பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை தடுக்க அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தான் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று அந்த நாட்டுக்கு சர்வதேச பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தச் சூழலில், நிர்மலா சீதாராமன் இவ்வாறு கூறியுள்ளார். ஐஎம்எஃப் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

இந்தியாவின் வளர்ச்சியில் நிலவும் சவால்களை முறியடிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கிய கொள்கை முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், பொருளாதார மந்த நிலையையும் தாண்டி, எதிர்வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரமாக இருக்கும். எங்களது விவேகமான கொள்கைகள் மூலம் மிக வலுவான பொருளாதாரச் சூழலை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம்.

இந்தியாவில் நிறுவனங்கள் வரி சீரமைப்பு மற்றும் குறைப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் உள்கட்டமைப்பு, தொழில் துறைகளில் முதலீடுகள் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பை ரூ.355 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் துறையில் சுமார் ரூ.100 லட்சம் கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான செயல்திட்டத்தை வகுக்க பணிக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகப் போர், இதர அசாதாரணமான சூழல்கள், உலகின் பொருளாதார வளர்ச்சியில் பாதகமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய அபாயங்களை குறைப்பதற்கான அமைப்புமுறையை உருவாக்க, சர்வதேச செலாவணி நிதியம், உலக வர்த்தக மையம் போன்ற சர்வதேச அமைப்புகள் பணியாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் பொருளாதார நாடு என்ற அடிப்படையில், உலக அளவில் நிதிசார் ஒருங்கிணைப்பை வளர்த்தெடுப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று நம்புகிறோம். சர்வதேச அளவில் பாதகமான பொருளாதார சூழல் நிலவும் போதிலும், அதற்கு நேர்மாறாக இந்தியப் பொருளாதாரம் உள்ளது. இந்தியாவில் குறிப்பிட்ட சில துறைகளில் நிலவும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது என்றார் 
நிர்மலா சீதாராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT