கனடா நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என தேர்தலின் முதற்கட்ட முடிவுகளை வைத்து அனைத்தின் பிரபல ஊடகம் கணித்துள்ளது. இதனால் லிபெரல் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவின் முன்னாள் பிரதமர் பியர் ட்ரூடோவின் மகன் ஜஸ்டின் ட்ரூடோ முதல்முறையாக கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டின் பிரதமர் ஆனார். கனடாவின் இளம் வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள இவர், அந்நாட்டு மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர். அதுமட்டுமின்றி, இலங்கை, சிரியா உள்ளிட்ட அந்நிய நாட்டு அகதிகளுக்கு இடமளித்து உலக நாடுகள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றவர்.
இந்த நிலையில், ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரூடோவின் லிபெரல் கட்சிக்கும், கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில் கன்சர்வேட்டிவ் கட்சி அதிக இடங்களை வெல்லும் என சில கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பான்மையின்றி அதே நேரத்தில் இதர இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோவின் லிபெரல் கட்சியே இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் என இறுதிக்கட்ட கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதாவது, கனடாவின் பிரபலமான சிபிசி என்ற ஊடகம் இந்தக் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 170 இடங்களில் லிபெரல் கட்சி 156 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அதே நேரத்தில் கான்சர்வேட்டிவ் கட்சியினர் கடந்த முறை 90 இடங்களைப் பெற்ற நிலையில் இந்தத் தேர்தலில் 122 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்நாட்டில் உள்ள மற்ற இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளதால் லிபெரல் கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பின்னரே கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது உறுதியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.