உலகம்

ஆப்கன்: அமெரிக்கத் தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல்

DIN


ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் நியூயார்க் நகர இரட்டை கோபுரத் தாக்குதல் நடத்தப்பட்டதன் 18-ஆவது ஆண்டு தினம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
காபூலில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அந்த ஏவுகணை விழுந்து வெடித்ததால் புகை மண்டல் ஏற்பட்டது. அதையடுத்து, இந்தத் தாக்குதல் குறித்து தூதரகத்தில் இருந்த அதிகாரிகளுக்கு ஒலிப் பெருக்கி மூலம் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
எனினும், இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
அமெரிக்கத் தூதரகத்தையொட்டி அமைந்துள்ள நேட்டோ படை மையமும், இந்த ஏவுகணைத் தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளது.
தலிபான் பயங்கரவாதிகளுடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததற்குப் பிறகு காபூல் நகரில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகவும், இரு தரப்பிலும் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் என்றும் கடந்த வாரம் வரை கூறப்பட்டு வந்தது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறுவதற்கும், அதற்குப் பதிலாக தலிபான்கள் பயங்கரவாதத் தாக்குதலைக் கைவிடுவதற்கும் அந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், காபூலில் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்க வீரர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
அந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதையடுத்து, பயங்கரவாதத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தப் போவதாக தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந்தச் சூழலில், காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT