உலகம்

அமெரிக்க பயணம் முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

DIN

அமெரிக்காவுக்கு 21-ஆம் தேதி 7 நாள் பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் முடிவில், இந்திய - அமெரிக்க எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ரூ.2.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம் கோடி) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனிடையே அங்கு வாழும் பண்டிட் மற்றும் சீக்கிய சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். 22-ஆம் தேதி ஹூஸ்டன் நகரிலுள்ள என்ஆர்ஜி மைதானத்தில் இந்திய, அமெரிக்கர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்ட 'மோடி நலமா' (ஹெளடி மோடி) எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே மேடையில் உரையாற்றினர்.

பின்னர் நியூயார்க் சென்றடைந்த பிரதமர் மோடி, 24-ஆம் தேதி ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச் சபை தலைமையகத்தில் காந்தி சூரியப் பூங்காவை திறந்து வைத்தார். மகாத்மா காந்தியின் சிறப்பு தபால் தலையையும் ஐ.நா. சபை வெளியிட்டது.

இந்நிலையில், இந்தியா-அமெரிக்கா இடையே பொருளாதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் விரைவில் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இதையடுத்து பல்வேறு உலகத் தலைவர்களுடனும் கலந்துரையாடினார். 

தூய்மை இந்தியா திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பான பங்களிப்புக்காக, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் அவருக்கு குளோபல் கோல்கீப்பர் விருதை அறக்கடளைத் தலைவர் பில் கேட்ஸ், பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற புளூம்பெர்க் உலக தொழில் மன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு, இந்தியாவில் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய இயலும். முதலீடு செய்வதற்கு இந்தியா பாதுகாப்பான நாடு என்று பிரதமர் நரேந்திர மோடி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 74-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டத்தில் உரையாற்றினார். அதில், உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்டு வரும் பயங்கரவாதச் செயல்களைத் தடுத்து நிறுத்த சர்வதேச அமைப்பை உருவாக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 

இறுதியாக, ஐ.நா. பொதுச் சபையில் 27-ஆம் தேதி காலை புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். இந்நிலைியல், வெள்ளிக்கிழமை மதியம் அங்கிருந்து நாடு திரும்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT