முகப்பு
உலகம்

பணிக்குத் திரும்பினார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கரோனா தொற்றில் இருந்து மீண்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பிரதமர் அலுவலகத்துக்கு வந்து தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.

Updated On : 27 ஏப்ரல், 2020 at 2:15 PM
பகிர்:

லண்டன்: கரோனா தொற்றில் இருந்து மீண்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பிரதமர் அலுவலகத்துக்கு வந்து தனது வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.

நாட்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் வழக்கமான கூட்டத்தை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகும் நிலையில், அதில் இருந்து மீண்டு, தனிமைப்படுத்தும் காலம் காரணமாக வீட்டில் இருந்தே பணிகளை கவனித்து வந்த போரிஸ் ஜான்சன், அந்நாட்டு நேரப்படி ஞாயிறு மாலை பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார்.

ஏப்ரல் 5ம் தேதி பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிப்புக்குள்ளானார். இதையடுத்து, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம் பொறுப்பை ஒப்படைத்து அலுவல் பணிகளிலிருந்து அவர் விலகியே இருந்தார்.

Advertisement

இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போரிஸ் ஜான்சன், ஏப்ரல் 12-ஆம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில், அவர் இன்று பிரதமர் அலுவலகத்துக்குத் திரும்பினார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், போரிஸ் ஜான்சன் மீண்டும் பொறுப்புக்கு வந்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பலி எண்ணிக்கை கொண்ட நாடுகளில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பிரிட்டன் 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.