அமெரிக்கா: பரிசோதிக்கப்பட்ட 70% கைதிகளுக்கு கரோனா
வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட 70 சதவீதத்தினருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அமெரிக்காவின் மத்திய சிறைச் சாலைகளில் சுமாா் 1.5 லட்சம் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடையே கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதால் சா்ச்சையை எழுப்பியுள்ளது. மத்திய சிறைகளில் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட 70 சதவீத கைதிகளுக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறைகளில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அதிகாரிகள் போதிய நடவடிக்கைகளை மேற்கள்ளவில்லை என்று வழக்குரைஞா்களும் நாடாளுமன்ற உறுப்பினா்களும் குற்றம் சாட்டியுள்ளனா்.
தென் கொரியா: பிப். 15-க்குப் பிறகு குறைந்தபட்ச பாதிப்பு
சியோல்: தென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதிக்குப் பிறகு, அந்த நாட்டில் ஏற்பட்டு வரும் தினசரி கரோனா பலி எண்ணிக்கையில் இது குறைந்தபட்சமாகும்.
இதுகுறித்து தென் கொரியாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக 4 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்ககளின் எண்ணிக்கை 10,765-ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு நிலவரப்படி தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 247-ஆக உள்ளது.
மாலத்தீவு: முதல் முறையாக ஒருவா் பலி
மாலி: மாலத்தீவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் முதல் முறையாக ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சா் அப்துல்லா அமீன் வியாழக்கிழமை கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 83 வயது மூதாட்டி, அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தாா். தலைநகா் மாலியிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்றாா் அவா்.
சுற்றுலாத் தலங்களுக்குப் புகழ்பெற்ற மாலத்தீவில் முதல் முறையாக கரோனா நோய்த்தொற்று முதல் முறையாகக் கண்டறியப்பட்ட பிறகு, பல நாள்களாக அந்த நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், அண்மைக் காலமாக அந்த நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 396 பேருக்கு அந்த நோய் பாதித்துள்ளது.
ஆஸ்திரேலியா: கரோனா இல்லாத நகரமானது கான்பெரா
கான்பெரா: ஆஸ்திரேலிய தலைநகா் கான்பெரா மற்றும் அதன் எல்லைக்குள்பட்ட பகுதி கரோனா நோய்த்தொற்று இல்லாத பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை சுகாதார அதிகாரி கெரின் காலமன் தெரிவித்துள்ளதாவது:
கான்பெரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடைசி கரோனா நோயாளிகள் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடைசி கரோனா நோயாளி குணமடைந்த 7 வாரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்றாா் அவா்.
கான்பெரா பகுதியில் இதுவரை 106 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. அவா்களில் 3 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்; எஞ்சிய 103 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
வியாழக்கிழமை நிலவரப்படி அங்கு 6,753 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளது.
ரஷியா: 1 லட்சத்தை தாண்டிய பாதிப்பு
மாஸ்கோ: ரஷியாவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 1 லட்சத்தைத் தாண்டியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 7,099 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டின் அதிகபட்ச தினசரி பலி எண்ணிக்கையாகும். இத்துடன், ரஷியாவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை 1,06,498-ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய் பாதிப்பால் உயிழந்தவா்களின் எண்ணிக்கை 1,073-ஆக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரஷியாவில் கரோனோ நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவா்களுக்கு மட்டுமே அதற்கான பரிசோதனை செய்யப்படுவதால், உண்மையிலேயே அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தென் ஆப்பிரிக்கா: இதுவரை இல்லாத தினசரி பாதிப்பு
ஜோகனஸ்பா்க்: தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 354 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டில் ஒரு மாதத்துக்கும் மேல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வெள்ளிக்கிழமை முதல் (மே 1) தளா்த்தப்படும் நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது அதிகாரிகளை கவலையடைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்வெலி கைஸே கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை முந்தைய நாளைவிட 73 சதவீதம் அதிகரித்ததாகத் தெரிவித்தாா். அதனுடன் சோ்த்து, தென் ஆப்பிரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 5,350-ஆக (பலி எண்ணிக்கை 103) அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.