உலகம்

செவிலியரின் கையில் 3 குழந்தைகள்: வேகமாகப் பரவும் பெய்ரூட் புகைப்படம்

DIN


பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப் பகுதியில் சுமார் ஆறு ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாகினர், 4,000 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், பெய்ரூட்டின் ஒரு மருத்துவமனையில், வெடி விபத்தால் கட்டடம் சேதமடைந்த போது சிகிச்சையில் இருந்து மூன்று பச்சிளம் குழந்தைகளை பத்திரமாக மீட்டு கையில் வைத்திருந்த செவிலியரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தை எடுத்தவர் புகைப்படக் கலைஞர் பிலால் ஜாவிச். லெபனானில் மிகப்பெரிய வெடி விபத்து நிகழ்ந்த போது புகை மூட்டத்தை தொடர்ந்து சென்ற போது நான் அடைந்தது பெய்ரூட் துறைமுகத்தை. அங்கு கண்ட காட்சிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டே ஐ ரௌம் மருத்துவமனையை அடைந்தேன். அந்தப் பகுதியும் வெடிவிபத்தால் பலத்த சேதமடைந்திருந்தது.

அங்கே என்னை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு செவிலியர் தனது கையில் மூன்று பச்சிளம் குழந்தைகளை வைத்துக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்தேன். ஆனால் அவர் எந்த பதற்றமும் அடையவில்லை. மிகவும் அமைதியாகவே காணப்பட்டார். இவ்வளவுப் பெரிய விபத்துக் கூட அவரை பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, காரணம், அந்த மூன்று குழந்தைகளை காப்பாற்றிவிட்டோம் என்ற ஒரு உணர்வே அவரை ஆக்ரமித்திருந்ததை உணர முடிந்தது என்கிறார் ஜாவிச்.

மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்த செவிலியர் பயங்கர இடியோசை கேட்டதும், தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்தே போனாராம். நினைவு திரும்பும் போது கையில் மூன்று பச்சிளங்குழந்தைகளுடன் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தாராம்.

ஆனால் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த மருத்துவமனையில் 12 நோயாளிகள், 2 வருகையாளர்கள், 4 செவிலியர்கள் உயிரிழந்துவிட்டனர். இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மருத்துவமனை வளாகம் 80% சேதமடைந்துவிட்டது என்கிறது மருத்துவமனை நிர்வாகம்.

பெய்ரூட் துறைமுகப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பயங்கர சத்தத்துடன் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் நகரத்தின் பாதி கட்டடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் ஏராளமானோர் காயமடைந்ததால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. 
அமோனியம் நைட்ரேட் வெடித்து, இரண்டாவது அதிர்வு ஏற்பட்டபோது மிகப்பெரிய ஆரஞ்சு நிற ஜுவாளைகள் வானை எட்டின, ஒரு மிகப்பெரிய சூறாவளியைப் போன்ற அதிர்வலை துறைமுகப் பகுதியில் இருந்து அருகில் இருக்கும் நகரங்களுக்கு பரவியது. இதனால், கட்டடங்கள் குலுங்கின.

இந்த அதிர்வலை, 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் சுமார் 240 கி.மீ. தொலைவு வரை சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிந்து தரைமட்டமான, எரிந்து சாம்பலான, நொறுங்கிய கட்டடங்களுக்குள் இருந்து ரத்தமும் சதையுமாக பல உடல்களும், காயமடைந்தவர்களும் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து லெபனான் பிரதமர் கூறுகையில்,’’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த பிரச்னையை சகித்துக்கொண்டு இருக்க மாட்டோம்’’ என்று கூறினார்.

இதுகுறித்து நாட்டின் பொது பாதுகாப்பு சேவை தலைவர் ஜெனரல் அப்பாஸ் இப்ராஹிம் கூறுகையில், பூர்வாங்க தரவுகளுக்கு ஏற்ப, நீண்ட காலமாக துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் வெடித்ததாக கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT