கரோனாவிலிருந்து மீண்டவர்களில் 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு: வுஹான் ஆய்வில் தகவல்
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களில் 90 சதவிகிதம் பேரின் நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீனாவின் வுஹான் மாகாணத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களில் 90 சதவிகிதம் பேரின் நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. முதன்முதலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சீனாவின் வுஹானில் கரோனா எண்ணிக்கை குறைந்து பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. தற்போது வுஹானில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்ப்பட்டு மீண்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.வுஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் இயக்குனர் பெங் ஜியோங் தலைமையிலான குழு, ஏப்ரல் மாதம் முதல் காரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளை பின்தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டது.
முதற்கட்ட ஆய்வு ஜூலை மாதத்துடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் கட்ட முடிவுகளின்படி, நோயாளிகளின் நுரையீரலில் 90 சதவீதம் இன்னும் சேதமடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு மேற்கொள்ளப்பட்டவர்களின் நுரையீரல் காற்றோட்டம் மற்றும் ஆக்சிஜன் பரிமாற்ற செயல்பாடுகள் ஆரோக்கியமான நபர்களின் நிலைக்கு ஏற்ற வகையில் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
பெங்கின் குழு நோயாளிகளிடம் நடத்திய ஆறு நிமிட நடை பரிசோதனையில் மீட்கப்பட்ட நோயாளிகள் ஆறு நிமிடங்களில் 400 மீட்டர் மட்டுமே நடக்க முடிந்தது என்று கண்டறியப்பட்டது. அதே நேரத்தில் ஆரோக்கியமான நபர்கள் 500 மீட்டர் தூரம் நடக்க முடிந்ததாக அந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் கரோனாவிலிருந்து மீண்டவர்களில் 10 சதவிகிதத்தினருக்கு கரோனா எதிர்ப்பு சக்திகள் உடலில் தொடர்ச்சியாக நிலைத்து நிற்பதில்லை எனத் தெரியவந்துள்ளது.
காரோனாவிலிருந்து மீண்ட 100 பேரில் 90 பேர் நுரையீரல் பாதிப்புகளுக்கும் 5 பேர் மீண்டும் கரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.