உலகம்

பெய்ஜிங்கில் குழந்தைகளை வரவேற்கக் காத்திருக்கும் பள்ளிகள்

DIN

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, கரோனா வைரஸ் காலத்தில் விடப்பட்ட நீண்ட விடுமுறை குழந்தைகளை சலிப்படையச் செய்துள்ளது.

பள்ளி சென்று நண்பர்களுடன் பழகி, விளையாட அவர்களின் மனம் ஏங்கித் தவிக்கிறது. ஆனால், நோய் பரவி வரும் இக்காலத்தில், பொருளாதர மீட்சிக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் போல, பள்ளிகளின் மீட்சிக்கு எடுத்து விட முடியாது. பள்ளிகள் என்பது குழந்தைகள் குழுவாகக் கூடிப் பயிலும் இடம். அவசர கதியில் பள்ளிகளைத் திறப்பது பேராபத்தில்தான் முடியும். 

உரிய நோய் கட்டுப்பாடின்றி பொருளாதார மீட்சி நடவடிக்கை எடுத்தபின் ஒரு சில நாடுகளில் நோய் பாதிப்பு விரைவாக அதிகரித்ததைக் காண முடிந்தது. அதனால், பள்ளிகளைத் திறப்பதில் ஒவ்வொரு நாடுகளின் அரசும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டாலும், இணைய வழியில் நடைபெறும் வகுப்புகளைக் குழந்தைகள் அதிகமாக விரும்பவில்லை.

பெய்ஜிங்கில் தற்போது நோய் பரவல் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது உறுதியானதைத் தொடர்ந்து, இலையுதிர்கால பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பருவத் தொடக்கத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் கடந்த ஜூன் 11ஆம் தேதி திடீரென மீண்டும் இவ்வைரஸ் பரவத் தொடங்கியது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

ஆனால், அதிகாரிகள் துரிதமாக எடுத்த நடவடிக்கை நல்ல பலனைத் தந்துள்ளது. நோய்தொற்று ஏற்பட்ட 335 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, நோய் முழுமையாக்க் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், ஏற்கெனவே திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டன. அத்துடன், உள்ளூர் சுற்றுலாவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.  பெய்ஜிங்கில் புதிய-இயல்புநிலை நிலவுவதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இச்சூழலில்தான் புதிய பருவத்துக்கான மாணவர்கள் சேர்க்கை ஆக்ஸட் 15 முதல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 

பெய்ஜிங்கில் மட்டும் 93 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. இந்த வளாகங்கள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. ஆகையால், மிகச் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மட்டுமே கல்வி நிறுவனங்களைத் திறக்க வேண்டும்.

இதற்குக் கல்வி நிறுவனங்கள், பொதுவான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் முன்னேறிய தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றன. பீகிங் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் கூறுகையில், “மாணவர்களின் தனிநபர் தகவல்களை எண்ணியில் முறையில் சேகரிக்கும் விதம் பெரிய தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை எங்கள் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய உள்ளது.

உதாரணத்துக்கு, சிற்றுண்டிச் சாலைகளில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால், ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களையும் அப்பகுதிக்கு அனுமதிக்க முடியாது. அதற்காக, உணவு உட்கொள்வதற்கான குறியீட்டை வெளியிட உள்ளோம். ஆகவே, ஒதுக்கப்படும் நேரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிற்றுண்டிச் சாலைகளுக்குச் செல்ல முடியும். இதனால் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும்,” என்றார்.

பெய்ஜிங் வேதியியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரி ஸு ஹய்ஜுன் கூறுகையில், மாணவர்கள் பள்ளி திரும்புகையில் அவர்களுக்கு ஒரு சிறு மருத்துவப் பெட்டி வழங்கப்படும். அதில், வெப்பநிலைமானி, முகக் கவசங்கள், தொற்றுநீக்கி ஆகியவை இருக்கும் என்றார்.

பாதிப்பு குறைவான பகுதிகளில் இருந்து வருபவர்கள் உடல்நிலைக் குறியீட்டைக் கண்டறியும் செயலியைப் பயன்படுத்த வேண்டும்; பாதிப்பு நடுத்தர நிலையில் இருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் வளாகத்துக்குள் செல்லும் முன் 14 நாள்கள் தனிமைப்படுத்தல் மற்றும் நியூக்ளிக் அமில சோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்ற சுற்றறிக்கை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சீன அரசின் இத்தகைய முன்னேற்பாடுகள் மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரமாகக் கடவேனோ..!

கண்ணே கலைமானே...தமன்னா!

கேரளம்:10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99.69% பேர் தேர்ச்சி

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

SCROLL FOR NEXT