பதவியை ராஜிநாமா செய்கிறாரா ஜப்பான் பிரதமர் அபே?
உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வரும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வரும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
65 வயதான சின்சோ அபே ஜப்பான் பிரதமராக உள்ளார். உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ள ஜாப்பானில் அபே இரண்டாவது முறையாக பிரதமராக பணியாற்றி வருகிறார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அபே ஒவ்வொரு 6 மாதத்திற்கும் மருத்துவப்பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் பிரதமர் அபே ரத்தவாந்தி எடுத்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அபேயின் உடல்நிலைக் குறித்து பல்வேறு செய்திகள் உலவின.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்ததை நினைவுகூறும் விழாவில் கலந்து கொண்ட பின்னர், பிரதமர் தனது கோடை விடுமுறையை யமனாஷி ப்ரிபெக்சரில் உள்ள தனது விடுமுறை இல்லத்தில் கழிப்பது வழக்கம். இந்த ஆண்டு, அவர் ஜப்பான் நாட்டில் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் எழுந்ததற்கு இடையில் டோக்கியோவில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் சமீபகாலமாக பங்கேற்று வந்த அவர் மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த சில தினங்களுக்கு முன் கியோ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அபேவின் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் பிரதமர் அபேயின் ராஜிநாமா குறித்து வெளியாகும் தகவல் உலக அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.