'முகப் பாதுகாப்புக் கவசம் மட்டும் போதுமானதில்லை'
கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணியாமல், வெறுமனே முகப் பாதுகாப்புக் கவசம் அணிவது பலனளிக்காது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
டோக்யோ: கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணியாமல், வெறுமனே முகப் பாதுகாப்புக் கவசம் அணிவது பலனளிக்காது என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் மிக முக்கிய ஆயுதமாக விளங்குவது முகக்கவசம்தான். அதற்கடுத்த இடத்தில் சமூக இடைவெளியும், கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டுக் கழுவுவதும் அமைந்துள்ளன.
ஆனால், தற்போது, பொது இடங்களுக்குச் செல்லும் பலரும், முகப் பாதுகாப்புக் கவசத்தை (பேஸ் ஷீல்டு) அணிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், அது கரோனா தொற்றிலிருந்து காக்கும் கருவிதான் என்றாலும், வெறுமனே முகப் பாதுகாப்புக் கவசம் மட்டுமே போதுமானதல்ல என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த ஃபுகோகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், ஒருவர் முகப் பாதுகாப்புக் கவசம் அணிந்திருக்கும் போது அருகிலிருப்பவர் இருமினாலோ, தும்மினாலோ அதிலிருந்து வரும் நீர்த்திவளைகள் முகப் பாதுகாப்புக் கவசத்தில் படிந்திருக்கும் என்பதால், அதன் மூலம் கரோனா தொற்று அதனை அணிந்திருப்பவர்களுக்கும் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
முகப் பாதுகாப்புக் கவசத்தின் கீழ்ப் பகுதியை கரோனா தொற்று அடைந்துவிட்டால், அதனை அணிந்திருப்பவரை சுவாசிப்பதன் மூலம் கரோன தொற்று அடைந்துவிடும், இவ்வாறு முகப் பாதுகாப்புக் கவசத்தில் விழும் நீர்த்திவளைகள் 0.5 வினாடி முதல் 1 வினாடிக்குள் அதனை அணிந்திருப்பவரை அடைந்துவிடும் வாய்ப்பும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, ஒருவர் முகக்கவசம் அணியாமல் வெறுமனே முகப் பாதுகாப்புக் கவசம் அணிந்திருப்பது, கரோனா தொற்றிலிருந்து காத்துக் கொள்ள உதவாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.