முகப்பு
உலகம்

உதவி இல்லாவிட்டாலும், உபத்திரவம் செய்ய வேண்டாம்: டிரம்புக்கு காவல் துறைத் தலைவர் அறிவுரை

​ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாயை மூடி இருக்க வேண்டும் என காவல் துறைத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:44 PM
கோப்புப்படம்
பகிர்:


ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாயை மூடி இருக்க வேண்டும் என காவல் துறைத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மினிசொட்டா மாகாணத்திலுள்ள மினியாபொலிஸ் நகரில் காவல் துறையினரால்  கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து அமெரிக்கா முழுவதும் கடும் போராட்டங்களும் வன்முறைகளும் நடந்துவருகின்றன. இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு காவல் துறை திணறி வருகிறது.

இதனிடையே, ஜூன் 1-ஆம் தேதி மாகாண ஆளுநர்களிடம் பேசிய டிரம்ப், "நீங்கள் ஆதிக்கம் செலுத்தாவிட்டால், நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று அர்த்தம்" என்றார்.

இந்த நிலையில், இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் ஹூஸ்டன் காவல் துறைத் தலைவர் ஆர்ட் அஸ்வோடோ, சிஎன்என் செய்தி ஊடகத்திடம் பேசுகையில், "இந்த நாட்டின் காவல் துறைத் தலைவர்கள் சார்பாக அமெரிக்க அதிபருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களிடம் ஆக்கப்பூர்வமாகச் செய்ய ஏதும் இல்லையென்றால், வாயை மூடி இருங்கள்" என்று அறிவுரை வழங்கினார். மேலும் பேசிய அவர், "இது மக்களின் மனதையும், இதயத்தையும் வெல்வது குறித்தானது. ஆதிக்கம் செலுத்துவது பற்றி அல்ல" என்றார்.

முன்னதாக, கடந்த மே 29-ஆம் தேதி இந்தப் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட சுட்டுரைப் பதிவு அனைவரது மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தப் பதிவில் போராட்டக்காரர்களைக் குறிப்பிடும்வகையில், "கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றால், துப்பாக்கிச் சூடும் நடைபெறும்" என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →