உலகம்

போஸ் கொடுத்தற்குப் பதில் புரட்டிப் பார்த்திருக்கலாம்: டிரம்பின் பைபிள் பாலிடிக்ஸுக்குப் பதிலடி

DIN


காவல்துறையினரால் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதற்கு நீதிகேட்டு அமெரிக்கா முழுவதும் கலவரங்கள் நடந்துகொண்டிருக்க, தேவாலயத்தின் முன் பைபிளுடன் நின்று அதிபர் டிரம்ப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது பெரும் கண்டனங்களுக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. 

வெள்ளை மாளிகைக்கு எதிரிலேயே, நடந்துசெல்லக் கூடிய தொலைவில் இருக்கிற இந்தத் தேவாலயத்திற்குத்தான் அமெரிக்க அதிபராக இருப்பவர்கள் சென்று வருவது வழக்கமாக இருக்கிறது.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தும், அந்த மரணத்துக்கு நீதி கேட்டும் மக்கள் ஒருவார காலமாகப் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்க அரசு திணறி வருகிறது. இதனிடையே, அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவிக்கும் சில கருத்துகளும் போராட்டக்காரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

வெள்ளை மாளிகை வளாகத்திலேயே மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர், சில நாள்கள் முன் தீவைப்புகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடைபெற அதிபர் டிரம்ப்பே வெள்ளைமாளிகைக்குள் நிலத்தடிப் பதுங்கு அறையில் சென்றிருக்க நேரிட்டது. 

இந்தச் சூழ்நிலையில் தேவாலயத்துக்கு டிரம்ப் செல்ல வேண்டும் என்பதற்காக வெள்ளை மாளிகை வளாகத்திலும் அருகிலுள்ள லஃபாயேத் பூங்காவிலும் அமைதிப் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்களைக் கலைக்க அமெரிக்க காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசினர். ரப்பர் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டு மக்கள் விரட்டியடிக்கப்பட்ட பின், தேவாலயத்துக்கு மனைவி மெலனியாவுடன் சென்றார் அதிபர் டிரம்ப்.

தேவாலயத்தின் முன் நின்று விதவிதமான போஸ்களில் அவர் எடுத்துக் கொண்ட படங்கள் பின்னர் ஊடகங்களிலும் வெளியாகத் தொடங்கின. ஒரு படத்தில் பைபிளைக் கையில் ஏந்தியவாறு நிற்கிறார் டிரம்ப்.

டிரம்பின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பினரும் கடுமையானக் கண்டனங்களை எழுப்பிவருகின்றனர்.

150 ஆண்டுகளாக அமெரிக்க அதிபர்கள் வழிபட்டு வந்த தேவாலயத்தையும், பைபிளையும் டிரம்ப், அரசியலுக்காகத் தவறாகப் பயன்படுத்துவதாக மதத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குடியரசுக் கட்சியினரும் இதற்கு விமரிசனங்களை வைத்துள்ளனர்.

நெப்ரஸ்கா செனட் உறுப்பினர் பென் சாசி இதுபற்றி க் கூறுகையில், "வன்முறையில் ஈடுபடுவதற்கும், பிறர் சொத்துக்களைச் சேதப்படுத்துவதற்கும் எந்த உரிமையும் கிடையாது. ஆனால், போராட்டம் நடத்துவதற்கு அடிப்படை அரசியலமைப்பு உரிமை உள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக அமைதிப் போராட்டத்தைக் கலைப்பதற்கு நான் எதிரானவன்" என்றார்.

செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியின் ஒரே கருப்பின உறுப்பினரான டிம் ஸ்காட், "அதிபர் சென்று புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்தி கூட்டத்தைக் கலைப்பீர்களா என்று என்னிடம் கேட்டால், நான் மாட்டேன் என்றுதான் கூறுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

விமர்சனத்தின் உச்சமாக, வரும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடவுள்ள ஜோ பிடன், "பைபிளை ஏந்தி தேவாலயத்தின் முன் போஸ் கொடுப்பதற்குப் பதிலாக, அதைத் திறந்துபார்த்தால் அவர் ஏதேனும் அறிந்துகொண்டிருக்கலாம்" என்று கிண்டலடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் தொகுதி வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

புகழூரில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

நத்தமேடு பாதகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT