முகப்பு
உலகம்

அரசு வலைத்தளத்திலிருந்து கரோனா தரவுகளை நீக்கியது பிரேசில்

​பிரேசிலில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து அதிபர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், கரோனா குறித்த தரவுகள் அரசு வலைத்தளதிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
கோப்புப்படம்
பகிர்:


பிரேசிலில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து அதிபர் மீது விமரிசனங்கள் எழுந்து வரும் நிலையில், கரோனா குறித்த தரவுகள் அரசு வலைத்தளதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகிய நாடுகளில் பிரேசில் தற்போது அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளது. அதிகம் பலியானோர் கொண்ட நாடுகளில் இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பிரேசிலில் 35,026 பேர் பலியாகியுள்ளனர்.

சுகாதார வல்லுநர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், அந்த நாட்டில் கரோனா தொற்று வரும் வாரங்களிலேயே உச்சம் பெறும் என்பதால், எண்ணிக்கைகள் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கரோனா குறித்த தரவுகள் அந்த நாட்டு அரசின் வலைத்தளத்திலிருந்து நேற்று (சனிக்கிழமை) நீக்கப்பட்டன.

இதுபற்றி பிபிசி வெளியிட்ட செய்தியில், "கால அளவில் நகராட்சி மற்றும் மாநில வாரியாக ஆவணப்படுத்தி வந்த கரோனா தொற்று குறித்த தரவுகளை அந்த நாட்டு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை நீக்கியது. பிரேசிலில் தொடர்ந்து 4 நாள்களாக 1,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி வந்த நிலையில், இந்தத் தரவுகள் நீக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,075 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 904 பேர் பலியாகியிருப்பதாகவும் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 10,209 நோயாளிகள் குணமடைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவு, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் பரவலாக விமரிசிக்கப்படுகிறது.

தரவுகள் நீக்கப்பட்டது பற்றி அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், எண்ணிக்கைகள் பதிவு செய்யப்படுவதை மேம்படுத்துவதற்கான கூடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →